Last Updated : 21 Apr, 2014 03:50 PM

 

Published : 21 Apr 2014 03:50 PM
Last Updated : 21 Apr 2014 03:50 PM

முக்கியத்துவம் பெறும் நெல்லை ரயில்வே கோட்டம்! - அனைத்து கட்சி வேட்பாளர்களும் உறுதி

‘திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்கப்படும்’ என்று திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

கடந்த 1956-57-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி –கன்னியாகுமரி ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணிக்கு அனுமதிக்கப்ட்டன. அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதூர்சாஸ்திரி இத் திட்டத்தை அறிவித்தார்.

கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் பாதை 164.02 கி.மீ. அமைக்க 1972-73-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் ரூ.14.53 கோடி ஒதுக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக இத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதையை அப்போதைய பிரதமர் மொரார்ஜிதேசாய் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2-ம் கட்ட திட்டமான நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் பாதை சேவை 08-04-1981-ம் தேதி தொடங்கப்பட்டது.

திருவனந்தபுரம் கோட்ட வரலாறு

திருவனந்தபுரம் ரயில் கோட்டம் இந்தியாவில், 53-வது கோட்டமாக 1978-79-ம் ஆண்டில் ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, 02-10-1979 அன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. திருவனந்தபுரம் கோட்டம், பாலக்காடு கோட்டத்தில் உள்ள ஷொர்ணூர் - கொச்சி துறைமுகம் மற்றும் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள எர்ணாகுளம் - திருவனந்தபுரம் - கன்னியாகுமரி ரயில் வழித்தடங்களை இணைத்து இந்த கோட்டம் அமைக்கப்பட்டது.

இந்த கோட்டத்தில், 624.73 கி.மீ. வழித்தடங்கள் உள்ளன. கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில், 161.கி.மீ. ரயில்வழித்தடம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், ரகசியமாக கேரளாவை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தமிழக பகுதிகளை இணைத்து திருவனந்தபுரம் கோட்டம் உருவாக்கப்பட்டது.

குமரி மாவட்ட ரயில் தடங்கள் சில காலங்கள் மதுரை கோட்டத்தின் கீழ் இருந்தது. திருநெல்வேலியிலிருந்து இருப்புபாதை இணைப்பு நாகர்கோவிலுக்கு இல்லாதிருந்ததால், இதன் நிர்வாகப் பொறுப்பை 1979 அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன், ஒரு நிபந்தனையுடன் இணைக்கப்பட்டது.

நிபந்தனை யாதெனில், திருநெல்வேலி - நாகர்கோவில் இணைப்பு முடிந்த உடனே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் போக்குவரத்து நிர்வாகத்தையும் மதுரை கோட்டத்துடன் இணைத்து விட வேண்டும்.

பயன் இல்லா போராட்டம்

நாகர்கோவில் - திருநெல்வேலி 73.29 கி.மீ. ரயில் வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு ரயில் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது. இதன்பின் குமரி மாவட்ட ரயில் வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால், இதை நடைமுறைப்படுத்தாமல், திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடர்ந்து நீடித்தது.

மேலும், புதிதாக தொடங்கப்பட்ட ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டது. இதை கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் குமரி மாவட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நெல்லை மாவட்ட மக்களுடன் போராடியிருந்தால், குமரி மாவட்ட ரயில்வழித்தடங்கள் அனைத்தும் 1981-ம் ஆண்டே மதுரை கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். போராட்டங்களையும் மீறி, திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடமும் திருவனந்த புரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டன.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது. இக்கோட்டத்தின் கீழ் வருகின்ற கேரள மாநிலப் பகுதிகளில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு அக்கறை எடுத்துகொள்ளப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்களால் இந்த விவகாரம் பெருமளவு பேசப்படுகிறது.

வாக்குறுதியில் முக்கியத்துவம்

வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம் அமைப்பது, கன்னியாகுமரி- சென்னை இடையே இரட்டை ரயில்பாதை திட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. திருவனந்தபுரத்திலிருந்து தமிழகம் நோக்கி அமைக்கப்பட்ட ரயில்வழித்தடங்களில் உள்ள நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி கிராசிங் ரயில்நிலையங்களை அமைக்கும் போதே கேரளாவை சார்ந்த அதிகாரிகள் தொழில் நுட்பக் கோளாராக முதலாம் நடைமேடையை பக்க இணைப்பு ரயில் பாதை (லூப் லைனாக) வரும்படி வேண்டும்என்றே அமைத்துள்ளனர்.

அடிப்படை வசதிக்கு ஏக்கம்

இது ரயில்வே அதிகாரிகளின் உள்ளடிவேலை. குமரி மாவட்ட ரயில் பகுதிகளில் அனைத்து ரயில்களையும் நேரடி ரயில் பாதை வழியாக (மெயின் லைன்) வழியாக அதாவது நடைமேடை இரண்டு வழியாக இயக்கி குமரி மாவட்ட பயணிகளை சிரமப்படுத்துகின்றனர்.

தமிழக ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, பிளாட்பாரம் மேற்கூரை, தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம், இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, கணிப்பொறி முன்பதிவு மையம், ரயில் பெட்டிகளின் விபரம் அறியும் பலகை, இணைப்புசாலை, அமைத்தல், நடைமேடையின் அளவை நீட்டுதல், கணிப்பொறி ஒலிபெருக்கி வசதி, நடைமேடையில் அலங்கார ஓடுகள் பதித்தல், கழிப்பிட வசதி, தொலைகாட்சிபெட்டி மூலமாக ரயில்களின் வருகையை அறிவித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏதும் செய்வது இல்லை.

திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை பகல் நேரங்களில் இயங்குகின்ற அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யபடும் 2- ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலே பயணம் செய்யும் கேரளப்பயணிகளின் வசதிக்காக மட்டும் உள்ளது.

இந்த வசதி திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கம் இயங்குகின்ற ரயில்களில் கிடையாது. குமரி மற்றும் நெல்லை பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தன் கீழ் வந்தும் இப்பகுதிகள் தமிழக பகுதிகளாக இருப்பதால், இந்த வசதியை கேரளா அதிகாரிகள் தர மறுக்கிறார்கள்.

‘ஒரே கோட்டத்துக்குள் இரண்டு விதமான வசதிகளை அதிகாரிகள் பின்பற்றிவருகிறார்கள். இது மாற்றாந்தாய் நிர்வாகச் சீர்கேடாகும்’ என்று தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி தெரிவித்தார்.

பயன் இல்லை

ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் கேரளாவுக்கு என ஐந்து முதல் பத்து ரயில்கள் அறிவிக்கபட்டு வருகிறது. ஆனால், கன்னியாகுமரிக்கு ஒரு பட்ஜெட்டுக்கு ஒரு ரயில் வீதம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், மறுக்கப்பட்டு வருகிறது.

அதையும் மீறி சில ரயில்கள் அறிவித்தால் அந்த ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு கேரளா வழியாக சுற்று பாதையில் இயங்கும்படி அமைக்கபட்டிருக்கும். இந்த ரயில்களால் திருநெல்வேலி, குமரி மாவட்ட பயணிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை என்று மேலும் அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட ரயில்வே பகுதிகளை பிரித்து திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் அமைக்கும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த கோரிக்கையை வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதியில் சேர்த்திருப்பது ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x