Published : 06 May 2014 08:36 AM
Last Updated : 06 May 2014 08:36 AM

சீமாந்திராவில் கடும் பாதுகாப்பு நாளை வாக்குப்பதிவு: 8-வது கட்டமாக 64 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பதற்றமான 23 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பு

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த சீமாந்திரா பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

இப்பகுதியின் சட்டமன்றம், மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

வரும் ஜூன் 2-ம் தேதி ஆந்திர மாநிலம் அதிகாரபூர்வமாக பிரிக்கப்பட்டு தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்கள் உருவாக உள்ளன. கடந்த 30-ம் தேதி தெலங்கானா பகுதியில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளிலும், 17 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் 2-வது கட்டமாக சீமாந்திரா பகுதியில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

இப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. முன்னதாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சீமாந்திராவில், தெலுங்கு தேசம் கூட்டணி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும், பா.ஜ.க.வுடன் அக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால், தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மாநில பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங் களை நடத்தியதால், மக்கள் தங்களுக்கு பெருமளவில் வாக் களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை யுடன் உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

ஆந்திர மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பன்வர்லால் கூறுகையில், “சீமாந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 333 வேட்பாளர்களும், 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2,243 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தம் 3,67,62,975 பேர் வாக்களிக்க உள்ளனர். 40,708 மையங்களில் 272 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான 23 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்களை பொருத்தி வீடியோ பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

மக்களவைத் தேர்தலின் 8-வது கட்ட வாக்குப்பதிவு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் நாளை (மே 7-ம் தேதி) நடைபெறவுள்ளது.

இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

ஆந்திரப்பிரதேசத்தின் சீமாந்திரா (25 தொகுதிகள்), பிஹார் (7), இமாசலப் பிரதேசம் (4), ஜம்மு காஷ்மீர் (2), உத்தரப் பிரதேசம் (15), உத்தராகண்ட் (5), மேற்குவங்கம் (6) ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மொத்தம் 900 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி (உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி), பாஜக சார்பில் வருண் காந்தி (சுல்தான்பூர்), லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் (பிஹாரின் ஹாஜிபூர்), ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுவின் மனைவி ராப்ரி தேவி (சரண்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாவர்.

இது தவிர சீமாந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத் தேர்தலும், பிஹார் 2, இமாசலப் பிரதேசம் 1, உத்தரப் பிரதேசம் 2, மேற்கு வங்கம் -1 ஆகிய சட்டமன்றத் தொகுதி களில் இடைத்தேர்தலும் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x