Published : 05 May 2014 05:57 PM
Last Updated : 05 May 2014 05:57 PM
இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்கும் முடிவை, மத்திய அரசு திடீரென கைவிட்டது.
2009-ம் ஆண்டில் குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்பேரில் பெண் இன்ஜினீயர் ஒருவரை மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் உளவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணையதளம் அண்மையில் செய்தி வெளியிட்டது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணையதளம் சுட்டிக் காட்டியிருந்தது.
இந்த வேவுபார்ப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. ஆனால் கமிஷனுக்கு தலைமை ஏற்க நீதிபதி நியமிக்கப்படவில்லை.
இந்த விவாகரத்தை முன்வைத்து, மோடி மீது காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, வாக்கு எண்ணிக்கை நாளான மே-16ம் தேதிக்கு முன்னதாக விசாரணை கமிஷனுக்கு நீதிபதி நியமிக்கப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மோடிக்கு எதிரான விசாரணை கமிஷனுக்கு தலைமை ஏற்க நீதிபதிகள் தயங்குவதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கருத்து கூறும்போது, இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுவிட்டால் மோடி தப்புவது கடினம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், விசாரணை நீதிபதியை நியமிப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாகவே மத்திய அரசு பின்வாங்கியதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT