Published : 11 Apr 2014 04:39 PM
Last Updated : 11 Apr 2014 04:39 PM
நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிப்பதற்காக, வாஜ்பாய்க்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
'கட்சி மரபுகளை காக்க பாஜகவில் யாரும் இல்லை' என்ற கட்டுரையை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதள வலைப்பதிவில் வெளியிட்டுள்ளது.
அதில், பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை புகழ்ந்தும், அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தும் அந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
"பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு மிக சிறந்த நபர். அவரை போன்ற ஒரு தலைவர் தற்போது பாஜகவில் இல்லை. 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கு பிறகு கட்சி மிக பெரிய பின்னைடைவை சந்திக்கும் என்றும், மோடியின் செயல்பாடுகளை நினைத்தும் வாஜ்பாய் கவலைப்பட்டார்.
கட்சியின் மூத்த தலைவரை நிராகரித்து, குற்றப் பின்னணியில் உள்ள ஒரு முதல்வரை பாரதிய ஜனதா கட்சி எப்படி பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது. குஜராத் கலவரத்திற்கு பின், வாஜ்பாய், "சிலர் மோடியை நீக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதுவே எனது எண்ணமும் கூட' என்றார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிக சிறந்த நபர். அவரது சிறப்புக்கு ஏற்ற தலைவர்கள் யாரும் தற்போது பாஜகவில் இல்லை .
குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி எந்த உதவிகளை செய்யவில்லை. இது குறித்து வாஜ்பாய் மிகுந்த கவலையுற்றிருந்தார். மோடியை வெளியேற்ற வேண்டும் என நினைத்த வாஜ்பாயையே தற்போது பாஜக மறந்து விட்டது. அவர் பின்பற்றிய கட்சி மரபுகளையும் கட்சி மறந்து விட்டது' என்று அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இந்தக் கட்டுரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இது ஆளும் கட்சியின் விரக்தியையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, "காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் மேற்கொண்டுள்ள மோசமான செயல்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் அரசியல் ஆதாரத்திற்காக வாஜ்பாயை கையில் எடுத்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT