Published : 24 Apr 2014 02:47 PM
Last Updated : 24 Apr 2014 02:47 PM
ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வும், மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஷோபா நாகிரெட்டி கார் விபத்தில் மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷோபா நாகிரெட்டி, அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று நந்தியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது கார் கவிழ்ந்து விபத்துள்ளானது.
சாலையில் தானியங்கள் பரப்பி இருந்ததால் அதன் மீது சென்ற கார் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில், காரின் உள்ளே இருந்த ஷோபா நாகிரெட்டி தலையில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவருடன் இருந்த 2 காவல்துறை அதிகாரிகளும் கார் ஓட்டுனரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1996-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட ஷோபா நாகிரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.வி சுப்பா ரெட்டியின் மகள் ஆவார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் கட்சி தொண்டர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்ததால் தேர்தல் கமிஷனின் விதிப்படி ஆலகண்டா தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT