Published : 22 Apr 2014 11:47 AM
Last Updated : 22 Apr 2014 11:47 AM
பாஜகவின் நலம் விரும்பிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்று பேசுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் இணையதளத்தில் மோடி கூறியுள்ளதாவது: பாஜகவின் நலம் விரும்பிகள் என்று தங்களை கூறிக்கொள்வோர், தேர்தல் பிரச்சாரத்தை திசை திருப்பும் வகையில் பேசி வரு கின்றனர்.
வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை தொடர்பாக கருத்து களை தெரிவித்து வரும் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை சிலர் பேசி வருவது ஏற்புடையதல்ல. அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இனிமேல், அத்தகைய பேச்சை தவிர்க்க வேண்டும்” என்றார். ஆனால், பொறுப்பற்ற முறையில் பேசியவர்களின் பெயர்களை மோடி குறிப்பிடவில்லை.
சமீபத்தில் பாஜகவின் பிஹார் மாநில மூத்த தலைவர் கிரிராஜ் சிங், “மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்று பேசியிருந்தார்.
இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் சொத்து வாங்கு வதைத் தடுக்க வேண்டும், அதையும் மீறி செயல்படும் முஸ்லிம்களின் சொத்தை கையகப்படுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்திருந்தார்.
இந்த இருவரின் கருத்து களுக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றிற்குத் தான் நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்.
எங்களின் பிரச்சாரத்தைத் திசை திருப்பும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க மாட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காங்கிரஸ், இதுபோன்ற திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது” என்றார்.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், “பாஜகவின் நலம் விரும்பிகள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். நல்லாட்சி தொடர்பான பிரச்சாரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு மாறாக கூறப்படும் கருத்துகள், அரசியல் ரீதியிலான எதிரிகளுக்குத்தான் சாதகமாக அமையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT