Published : 20 Apr 2014 12:42 PM
Last Updated : 20 Apr 2014 12:42 PM

அயோத்தியில் நான்குமுனை போட்டி: வெற்றியை தீர்மானிக்கப்போகும் முஸ்லிம்கள்

உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதன் வெற்றியை முஸ்லிம்கள் தீர்மானிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமையக் காரணமாக இருந்தது அயோத்தியில் உள்ள ராமர் கோயில்-பாபர் மசூதி பிரச்சினை.

இந்தத் தொகுதியில் எம்பியாக இருக்கும் நிர்மல் கத்ரி (காங்கிரஸ்) மீண்டும் போட்டியிடுகிறார். உபியில் ஆளும் சமாஜ்வாதியின் மித்ருசென் யாதவ், பாஜகவின் லல்லு சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் பப்லி என்கிற ஜித்தேந்திரா சிங் ஆம் ஆத்மியின் இக்பால் முஸ்தபா ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இங்குள்ள 70 சதவிகித இந்துக்களின் வாக்குகளில் யாதவர்கள் (8%) சமாஜ்வாதிக்கும், தலித்துகள் (25%) பகுஜன் சமாஜுக்கும், மற்றவர்கள் பாஜகவுக்கும் ஆதரவாக உள்ளனர். இதனால் சுமார் 22 சதவிகிதம் உள்ள முஸ்லிம் வாக்குகளை அதிக அளவில் பெறும் வேட்பாளரே வெற்றி வாகை சூடுவது வழக்கமாக உள்ளது. இதற்காக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து'விடம் உபி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "அயோத்தியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இணைந்ததும் காங்கிரஸின் பலத்தை அதிகரித்துள்ளது" எனக் கூறுகிறார்.

இதுபற்றி ‘தி இந்து'விடம் பைசாபாத்வாசியும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் உறுப்பினருமான காலீக் அகமதுகான் கூறுகையில், ‘‘அயோத்தியில் காங்கிரஸ் பல பணிகளை செய்துள்ளது. இதன் ஆட்சியில், பாபர் மசூதியில் நள்ளிரவில் இரகசியமாக இராமர் சிலை வைத்தது, அதற்கு பூஜை செய்தது, பிறகு மசூதியை உடைத்தது. எனவே, முஸ்லிம்கள் வேட்பாளரை பொறுத்து வாக்களிக்கிறார்களே தவிர, எந்த ஒரு கட்சிக்காகவும் அல்ல’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x