Published : 24 Apr 2014 09:33 AM
Last Updated : 24 Apr 2014 09:33 AM

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கடைசி தேர்தல்: ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

ஆந்திரம் சுமார் 8 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முதல் விஜய நகர பேரரசர்கள்வரை ஆண்ட பூமி. மைசூர் மன்னர்கள், முகலாய பேரரசர்கள், துளுவர்கள், கோல்கொண்டா நவாபுகள் ஆண்ட நிலம். சைவமும் வைணவமும் செழித்தோங்கும் புண்ணிய தலம்.

ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர் இந்திய அரசியல் வரலாற்றில் பல முக்கிய அரசியல்வாதிகளை தந்த மாநிலம். இந்தியாவிலேயே மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம். இத்தனை சரித்திர பின்னணி உடைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் தற்போது நடைபெற உள்ளதுதான் கடைசி தேர்தல்.

திருமணங்கள், சொந்த, பந்தங்கள் என அனைத்திலும் பக்கத்தில் உள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களோடு ஆந்திர மாநில மக்கள் நல்லுறவு வைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் உருவாவதற்கு முன்பு சென்னைதான் அந்த மாநிலத்திற்கு தலைமை இடம்.

ஆந்திர மாநிலத்தில் தனி தெலங்கானா மாநில போராட்டம் 58 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும், சிறிது சிறிதாக பலம் பெற்று, இப்போராட்டம் கடந்த 5 ஆண்டுகளில்தான் விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அரசே முடங்கும் அளவிற்கு பொது மக்களின் போராட்டமாக மாறியது. இதற்கிடையே, மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என சீமாந்திராவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திய போதிலும், இறுதியில் தெலங்கானா போராட்டம் வெற்றி பெற்றது. வரும் ஜூன் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது.

தற்போதுள்ள ஆந்திர மாநிலத்தில், 294 சட்டமன்றத் தொகுதிகள், 42 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

வரும் 30-ம் தேதி தெலங்கானா பகுதியில் 119 சட்டமன்றத் தொகுதிகள், 17 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம் 7-ம் தேதி, சீமாந்திரா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் இருக்கும் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 6.48 கோடி வாக்காளர்களில், 3.26 கோடி ஆண்கள், 3.22 கோடி பெண்கள்.

ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தெலங்கானா மாநிலம் வழங்கியதின் மூலம், சீமாந்திராவில் இக்கட்சி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டது. ஆதலால் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவே பெரும் பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானாவில் எதிர்பார்த்தது போன்று அவ்வளவு எளிதாக காங்கிரஸால் வெற்றி பெற முடியாத நிலை. அங்கு தெலங்கனா ராஷ்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் போட்டியாக விளங்குகிறது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இரு பகுதிகளிலும் வெற்றி பெற பலத்த அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மத்தியிலும் மாநிலத்திலும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள நினைக்கிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சீமாந்திராவில் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற வேட்கையோடு களத்தில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் பதவியை துறந்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வர் கிரண் குமார் ரெட்டி, இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் தனது கட்சியை பலப்படுத்தப் போவதாக கூறி, ஒதுங்கி விட்டார்.

இந்த தேர்தல் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளின் தலை எழுத்துக்களை நிர்ணயிக் கும் தேர்தலாக விளங்குவதால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது வெற்றிக்காக போராடி வருகின்றனர். வேட்பாளர்களும் தங்களது கொள்கைகளை மறந்து கட்சி மாறி போட்டியிடுகின்றனர்.

புதிதாக உதயமாக உள்ள இரு மாநிலங் களிலும், இன்னமும் 10 ஆண்டுகளுக்கு ‘ஒரு குடும்பம், இரு சமையல்' எனும் நிலையில் ஒரே தலைநகரமான ஹைதராபாத்தில் இருந்து இரண்டு மாநிலங்களையும் ஆள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதலால், இதுவரை நடந்தவைகளை மறந்துவிட்டு, சகோதர தன்மையுடன் மாநிலங்களின் வளர்ச்சிக்காக இரு மாநில முதல்வர்களும் பாடுபட்டு மக்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையில் வழி நடத்த வேண்டும். இதுவே தற்போதைய இரு மாநில மக்களின் மன நிலையாகும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x