Published : 17 Apr 2014 10:18 AM
Last Updated : 17 Apr 2014 10:18 AM
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வர்களில் முக்கியமானவர் நந்தன் நிலகேனி. இன்போசிஸ் நிறு வனத்தின் இணை நிறுவனரும் ஆதார் அட்டை திட்டத்தின் முன்னாள் இயக்குநருமான நந்தன் நிலகேனி இப்போது அரசியல் வாதியாக அவதாரம் எடுத்திருக் கிறார்.பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கி, தீவிர பிரச்சாரம் செய்துவரும் அவரை ‘தி இந்து' சார்பாக சந்தித்தோம்.
அரசியலில் ஈடுபட எப்போது முடி வெடுத்தீர்கள்? எதற்காக காங் கிரஸை தேர்ந்தெடுத்தீர்கள்?
பெங்களூர் மாநகர வளர்ச்சி ஆணையம்,ஆதார் அட்டை திட்டம் மூலமாக கடந்த 10 ஆண்டு களாக மக்களிடையே பணி யாற்றி இருக்கிறேன். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல்தான் ஒரே கருவி. எனவே அரசியலில் சேர்ந்து பணியாற்றுவது என்று 8 மாதங்களுக்கு முன்பு முடி வெடுத்தேன்.என்னுடைய அப்பா ஜவஹர்லால் நேருவின் கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவர். காங்கிரஸ், நாட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஜனநாயகப் பூர்வமான கட்சியாக உள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ், இன்னும் நூறாண்டுகளை தாண்டியும் வெற்றிநடை போடும். எனவே, காங்கிரஸில் இணைய முடிவு எடுத்தேன்.
ஊழல்,விலைவாசி உயர்வு என பல விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் முன்வைக்கின்ற நேரத்தில், நீங்கள் அக்கட்சியில் இணைந்ததை சரியான முடிவு என கருதுகிறீர்களா?
காங்கிரஸ் கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் எத்தனை விமர்சனங்களை முன்வைத் தாலும் ஏழை எளிய மக்களின் வாழ்வில் காங்கிரஸ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை எவராலும் மறுக்க முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி எனப் பல பேதங்களை கடந்து இந்த தேசத்தில் அமைதியும் ஜனநாயகமும் தவழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காங்கிரஸ் மட்டுமே காரணம். பசுமை புரட்சி, தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சி, அறிவியல் துறையில் இமாலய சாதனை என அனைத்து துறையிலும் காங்கிரஸ் வளர்ச்சியை ஏற் படுத்தியிருக்கிறது. நான் மிகச் சரியான முடிவைத்தான் எடுத் திருக்கிறேன்.
பொருளாதாரத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கைப் போன்று மாநிலங்களவை உறுப்பினராக முயற்சிக்காமல், மக்களவைத் தேர்தலில் போட்டி யிட நீங்கள் முடிவு செய்தது ஏன்?
தேர்தலில் போட்டியிட்டு எதிர்ப் புகளையும் பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு வெற்றி பெறுவது சற்று கடினமான பாதை தான். இருப்பினும் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும் என்பதில் தெளி வாக இருந்தேன். மக்கள் செல் வாக்கைப் பெற்றால்தானே முழுமையான அரசியல்வாதியாக திகழ முடியும்?
பெங்களூர் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் பொதுச் செய லாளரான அனந்த்குமாரை வீழ்த்த முடியும் என நம்புகிறீர்களா?
நான் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன். அவர் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. இத்தொகுதியின் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.அவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி தேவை இல்லை. அவர்களுக்காக பணி யாற்ற ஒரு ஊழியன் மட்டுமே தேவைப்படுகிறான்.
உங்களுடைய வெற்றிக்காக என்னென்ன வியூகங்கள் வகுத்திருக்கிறீர்கள்?
என்னுடைய சாதகங் கள், பாதகங்களை அலசி ஆராய்ந்து, அத்தனையும் எதிர்கொள்வது எப்படி என திட்டமிட்டேன். குறுகிய கால இடைவெளிக்குள் ஒவ்வொரு வாக்காளரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்க வேண்டும். பெங்களூர் தெற்கு தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகளும், அதில் 61 வார்டுகளும் இருக்கின்றன. பிரச்சாரம்,பொதுக்கூட்டம் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வாக் காளர்களின் கவனத்தைப் பெற முயற்சித்து வருகிறேன்.
ஆதார் அட்டை பாதுகாப்பற்றது, சாமானிய மக்களுக்கு ஏற்றதல்ல என பா.ஜ.க.வேட்பாளர் அனந்த் குமார் கடுமையான விமர்சனங் களை முன்வைத்துள்ளாரே?
ஆதார் அட்டை திட்டத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதி யில்லை. உலகில் 60 கோடி பேருக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய தனிநபர் அடையாள அட்டை ஆதார் மட்டுமே. ஆதார் அட்டையின் மூலம் மக்களை உறிஞ்சும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும்,அரசின் பல்வேறு சலுகைகளையும் நேரடியாக வழங்கமுடியும். காரணமில்லாமல் விமர்சிப்பவர் களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தனியார் துறையில் இட ஒதுக் கீடு அவசியம் என்ற குரல் இந்தியா முழுவதும் உள்ள பல் வேறு முற்போக்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இன்போசிஸ் நிறு வனத்தின் இணை நிறுவனர் என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
சமூகத்தில் குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. அதனை ஈடுசெய்வதற்காகவே டாக்டர் அம்பேத்கர் பொதுத்துறையில் இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார்.
எனினும், பின்தங்கிய மக் களால் இன்னும் முன்னேற முடியாத நிலையே இருக்கிறது. பொதுத்துறையைப்போல தனியார் துறையிலும் இட ஒதுக் கீடு முறையை கொண்டு வர வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியே தவிர, ஒரு குறிப்பிட்ட மக்களின் வளர்ச்சி மட்டுமல்ல.
எனவே வேலை வாய்ப்பை உருவாக்கும் தனியார் நிறுவனங்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவிக்கான போட்டியில் உங் களுடைய பெயரும் அடி படுகிறதே. பிரதமர் கனவு உங் களுக்கும் இருக்கிறதா?
இந்த கேள்வியே தேவை யற்றது. இப்போதைக்கு என் னுடைய கவனமெல்லாம் பெங் களூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். பெங்களூரை சர்வதேச தரம்வாய்ந்த நகரமாக உயர்த்த வேண்டும். கல்வியும் சுகாதாரமும் அனைத்து மக் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT