Published : 05 Apr 2014 01:07 PM
Last Updated : 05 Apr 2014 01:07 PM

அசாம் முதல்வரின் பிரிட்டன் மருமகள் தீவிர பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அசாம் முதல்வர் தருண் கோகோயின் பிரிட்டன் மருமகள் எலிசபெத் கிளாரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தருண் கோகோயின் மகன் கவுரவுக்கும் (31) பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கிளாரிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. 2010-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கவுரவ் படித்தபோது எலிசபெத்தை சந்தித்துள்ளார். அவர்களின் நட்பு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் 5 மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அசாம் மாநிலம் காலியாபோர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கவுரவ் கோகோய் போட்டியிடுகிறார். தனது கணவருக்கு பக்கபலமாக எலிசபெத் கிளாரி தொகுதி முழு வதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

லண்டனில் இருந்து அசாமுக்கு குடிபெயர்ந்து 5 மாதங்களே ஆன நிலையில் அசாம் மொழியை கிளாரி நன்றாக கற்றுத் தேர்ந்துள்ளார். தங்களின் தாய் மொழியில் வெளிநாட்டுப் பெண் வார்த்தை பிறழாமல் மண் வாசனையோடு பேசுவதை அந்த மாநில மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிக்கின்றனர்.

வெறும் பேச்சோடு மட்டுமல்லா மல் பிராந்திய பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற மக்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கிளாரி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களுக்கு கணவனும் மனைவியும் ஜோடியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ் கோகோயை பொறுத்தவரை மனைவிதான் அவருக்கு நட்சத்திரப் பேச்சாளர் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x