Published : 10 Apr 2014 01:14 PM
Last Updated : 10 Apr 2014 01:14 PM

மோடி அலை தொலைக்காட்சிகளில் மட்டுமே வீசுகிறது: குலாம் நபி ஆசாத்

மோடி அலை தொலைக்காட்சிகளில் மட்டுமே வீசுவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜோகிகேட் வாக்குச்சாவடியில் இன்று காலை குலாம்நபி ஆசாத் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், "மோடி அலை தொலைக்காட்சிகளில் மட்டுமே வீசுவதாகவும், களத்தில் காங்கிரஸ் கட்சியே வலுவாக இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004, 2009-ல் ஆட்சியைப் பிடித்தது போல் 2014-லும் ஆட்சியை கைப்பற்றும். பாஜக-வை கடந்த 35 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்துவருகிறோம். அவர்களது தேர்தல் அறிக்கை நிச்சயம் அவர்களுக்கு எதிராகவே வாக்குகளை சேர்க்கும். ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 ஆகியனவற்றின் மீதான பாஜக நிலைபாட்டிற்க்கு மக்கள் பதிலளிப்பர்" என்றார்.

மோடி தனது வேட்புமனுவில் திருமணமானவர் என குறிப்பிட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட குலாம் நபி ஆசாத், "மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்கப் போவதில்லை" என்றார்.

அடையாள அட்டை எங்கே?

ஜோகிகேட் வாக்குச்சாவடிக்கு வந்த குலாம் நபி ஆசாத், தனது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துவரவில்லை. தேர்தல் அதிகாரி, அடையாள அட்டை இருந்தால் தான் வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்றார். மேலும், ஆசாத் யார் என்பது தனக்கு மிக நன்றாக தெரிந்திருந்தாலும், அவர் ஜோகிகேட் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவர் தானா என்பதை வாக்காளர் அடையாள அட்டையை வைத்தே உறுதி செய்ய வேண்டும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவுகிறது.

பின்னர், காங்கிரஸ் வேட்பாளர் மதன்லால் சர்மாவின் தேர்தல் ஏஜண்டுகள் ஆசாத்துக்காக வாய்மொழி உத்தரவாதம் அளித்தனர். இதற்கு பிற வேட்பாளர்களின் தேர்தல் ஏஜண்டுகள் எதிர்ப்பு தெரிவிக்காததால் குலாம் நபி ஆசாத் அங்கு வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x