Published : 11 Apr 2014 01:16 PM
Last Updated : 11 Apr 2014 01:16 PM
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ்தர் தொகுதியில் சுமார் 10 வாக்குச் சாவடிகளுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கிடையே, ஆங்காங்கே பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தி 3 பிரஷர் வெடிகுண்டுகள், 15 நாட்டு குண்டுகள் உள்ளிட்ட பெருமளவு வெடிபொருள்களை கைப்பற்றினர். இதனால் நக்ஸல்கள் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. பஸ்தர் பகுதியில் உள்ள 10 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பில் இருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் மாவோயிஸ்டுகள் சுட்டாலும் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலை முறியடிக்க போலீஸார் திருப்பிச்சுடவே அவர்கள் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்ததாக அவர் சொன்னார்.
சுக்மா மாவட்டம் அமிர்கர், கொரா, தண்டேவாடா மாவட்டம் சமோலி, தணிகர்தா சாவடிகள், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள நெத்நர் சாவடி, கொண்டாகாவூன் மாவட்டத்தில் படேலி ராய்கபோதி ஆகியவை நக்ஸல்களின் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள். இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்களுக்கு வாக்குப் பதிவு தடைபட்ட போதிலும் பின்னர் அமைதியாக தொடர்ந்தது.
காலையில் 7 மணிக்கு பஸ்தரில் வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் வரை 30 சதவீத வாக்குகள் பதிவாகின என இணை தலைமை தேர்தல் அதிகாரி டி.டி.சிங் தெரிவித்தார்.
இந்த பகுதியில் உள்ள பஸ்தர், சித்ரகூட், நாராயண்பூர், பிஜாபூர்,கோண்டா, கொண்ட காவூன், தண்டேவாடா ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடைபெற்றது. ஜகதால்பூர் பேரவைத் தொகுதியில் மட்டும் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
சத்தீஸ்கரில் வியாழக்கிழமை நடக்கும் முதல் கட்ட தேர்தலில் பஸ்தர் மக்களவைத் தொகுதி மட்டுமே இடம் பெற்றது. 2 பெண்கள் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நக்ஸல் சுட்டுக்கொலை
சுக்மா மாவட்டத்தில் பாதுகாப் புப்படையினருடன் நடந்த மோத லில் புதன்கிழமை இரவு ஒரு நக்ஸல் கொல்லப்பட்டார். மற்றொ ருவர் காயம் அடைந்தார்.
தேர்தலையொட்டி பாதுகாப் புக்கு பாதிப்பு வராமல் இருக்க போலீஸார் சத்தீஸ்கர்-ஆந்திரப் பிரதேச எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தியபோது கோத்தபள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்த மோதல் நடந்தது. கொல்லப்பட்ட நக்ஸல் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய எம்.பி. தினேஷ் காஷ்யப் நிறுத்தப் பட்டுள்ளார். காங்கிரஸ் தரப்பில் தீபக் கர்மா போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு மே 25ம்தேதி ஜிராம் பள்ளத்தாக்கில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சல்வா ஜுடும் இயக்கத்தின் நிறுவனர் மகேந்திர கர்மாவின் மகன் இவர்.
இருமுனைப் போட்டி என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆம் ஆத்மி சார்பில் தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சோனி சோரி களம் இறங்கியதால் மும்முனைப் போட்டியாக மாறி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT