Published : 30 Apr 2014 08:12 AM
Last Updated : 30 Apr 2014 08:12 AM

89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: தெலங்கானா சட்டமன்றத்துக்கும் தேர்தல்

நாடு முழுவதும் 7-வது கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளிலும், தெலங்கானா சட்டமன்றத் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

மக்களவைக்கு ஏற்கெனவே 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.ஏழாம் கட்டமாக ஆந்திரம் (தெலங்கானா)- 17, பிஹார்- 7, குஜராத்- 26, காஷ்மீர் -1, பஞ்சாப்- 13, உத்தரப் பிரதேசம்- 14, மேற்கு வங்கம் -9 ஆகிய மாநிலங்கள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி -1, டையூ டாமன்- 1 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இவை தவிர தெலங்கானாவின் 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் பிஹார்- 1, குஜராத் -7, உத்தரப் பிரதேசம் -2, மேற்கு வங்கம் -1 ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

தெலங்கானாவில் தேர்தல்:

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா மற்றும் சீமாந்திரா பகுதிகளில் தனித்தனியே தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகள், 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், மேடக் மக்களவைத் தொகுதியிலும் காஜ்வெல் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மெகபூப்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 413 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி (வதோதரா), பாஜக மூத்த தலைவர் அத்வானி (காந்தி நகர்), காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதனன் மிஸ்திரி (வதோதரா) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

சோனியா தொகுதியில்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேசம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் பிஹாரின் மாதேபுரா தொகுதியிலும் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பாஜக சார்பில் தர்பங்கா தொகுதியிலும் களத்தில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பப்பி லஹரி, நடிகர் ஜார்ஜ் பேக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் தவிர மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர் தொகுதி) பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போட்டியிடும் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x