Published : 24 Apr 2014 09:20 AM
Last Updated : 24 Apr 2014 09:20 AM
நடப்பு மக்களவை தேர்தலை யொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், இதுவரை ரூ.240 கோடி கணக்கில் வராத பணம், 1.32 கோடி லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ரூ.1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பாதிக்கும் அதிகமான தொகை கறுப்புப் பணம் என்று ஆய்வுத் தகவல் கூறுகிறது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெறும் முயற்சி ஒவ்வொரு தேர்த லுக்கும் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில், நடப்பு மக்களவை தேர்தலை யொட்டி நாடு முழுவதும் நடந்த சோதனைகளில் இதுவரை ரூ.240 கோடி கணக்கில் வராத பணம், 1.32 கோடி லிட்டர் மதுபானம், 104 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தத் தொகை ரூ.240 கோடியில், அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் ரூ.102 கோடியும், இதையடுத்து தமிழ்நாட்டில் ரூ.39 கோடியும், கர்நாடகத்தில் ரூ.20.53 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் கொண்டு செல்பவர் களிடம் இருந்து தேர்தல் அதிகாரி கள் கைப்பற்றியவை.
கடந்த 17-ம் தேதி வரை அதாவது 5-வது கட்ட தேர்தல் முடியும் வரை, தேர்தல் ஆணையத்தால் நாடு முழுவதும் ரூ.216 கோடிக்கும் மேற்பட்ட ரொக்கம், 1 கோடி லிட்டருக்கும் மேற்பட்ட மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக ரூ.92 கோடியும், இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ரூ.24 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கணக்கில் வராத பணம் பறிமுதலில் மகாராஷ்டிரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் தற்போது 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் “இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் தேர்தலுக்காக ரூ. 1.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமான தொகை கணக்கில் வராத கறுப்பு பணம்” என்று சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் (சி.எம்.எஸ்) என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 1.5 லட்சம் கோடியில், ஐந்தில் ஒரு பங்கு அதாவது ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே நடப்பு மக்களவைத் தேர்தலில் செலவிடப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பங்கான 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடி வரை கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் செலவிடப்பட்டுள்ளது.
இதுதவிர ஊராட்சித் தேர்தல்களில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கும், மண்டல தேர்தல்களில் ரூ. 20 ஆயிரம் கோடி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் ரூ. 15 ஆயிரம் கோடி, ஜில்லா பரிஷத் தேர்தல்களில் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சி.எம்.எஸ். புள்ளிவிவரம் கூறுகிறது.
புதிய மென்பொருள் ஏற்பாடு
இதனிடையே இதுபோன்ற பிரச்சினைகள், விதிகளை மீறிய பேச்சுகளை கண்டுபிடிக்க, பொதுமக்களும் மிக எளிதாக புகார் கூறும் வகையிலான ஏற்பாடுகளை தேர்தல் ஆணை யம் செய்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஆன்டிராய்டு கைப்பேசி களிலும் பதிவு செய்து ஆணையத்திற்கு அனுப்பும் வகையில் தேர்தல் ஆணையம், முதன்முறையாக ஒரு மென்பொருள் தயாரித்துள் ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “இந்த மென்பொருளை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இணைத்து விட்டால் போதும், அந்தப் பதிவுகளில் இருந்தே சம்பவம் நடந்த இடம், தேதி, நேரம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். அதேபோல், வீடியோவை பதிவு செய்தவரின் பெயர் விவரங்களையும் ரகசியமாக பாதுகாக்க வகை செய்யப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT