Published : 04 Apr 2014 00:00 am

Updated : 04 Apr 2014 21:18 pm

 

Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 09:18 PM

ஆட்சியர் அலுவலகத்தை சிரிப்பில் ஆழ்த்திய அடேங்கப்பா வேட்பாளர்கள்!

வேட்புமனு தாக்கலின் 3-வது நாளான புதன்கிழமை ஆண்டிச்சாமி என்பவர் முதல் நபராக மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தென்மண்டல முத்தரையர் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சியத்தோடு போட்டியிடுகிறேன். பல மாவட்டங்களில் எங்கள் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறோம். ஆனால், எந்த அரசியல் கட்சியுமே எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எங்கள் பலம் என்னன்னு மத்தவங்களுக்கெல்லாம் காட்டுவதற்காகவே நான் சுயேச்சையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்” என்றார்.

ஆவேசப் பேட்டி கொடுத்துவிட்டு, ஆட்சியர் அறையை நோக்கிச் சென்ற அவர் அடுத்த அரைமணி நேரத்தில் மனு தாக்கல் செய்யாமல் கீழிறங்கி வந்தார். காரணம் கேட்டபோது, ‘வேட்புமனு செய்பவர்கள் அதற்கு முந்தையதினம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகலையும் இணைக்க வேண்டுமாம். அதுதெரியாமல் போய்விட்டது’ என்று உதட்டை பிதுக்கினார்.

ஒத்த ரூபாய் மூட்டை

அவரைத் தொடர்ந்து, கும்பகோணத்தைச் சேர்ந்த குப்பல் ஜி.தேவதாஸ் என்பவர் டெபாசிட் தொகையை ஒத்த ரூபாய் சில்லரைக் காசுகளாக மாற்றிக்கொண்டு வந்தார். அவர் கூறும்போது, நான் 2006-ம் ஆண்டு கும்பகோணம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டேன். எதற்காக நம்முடைய பணத்தை ஒரு கட்சியிடம் கொடுத்து போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் சுயேச்சையாகப் போட்டியிட ஆரம்பித்தேன். இருமுறை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கும், இருமுறை எம்.எல்.ஏ பதவிக்கும் போட்டியிட்டிருக்கிறேன். 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்றார். பரிந்துரை செய்ய அவருடன் 10 பேர் வராததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் மனிதர் வெற்றி பெறப் போகிற வேட்பாளரைப் போல கம்பீரமாக நடை பயின்றார்.

தேர்தல் சபதம்

தொடர்ந்து, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆர்.பி.சந்திரபோஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். ‘கூடல்மாநகர் ஒருங்கிணைந்த அபே ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் நான் போட்டியிடுகிறேன். நான் வென்றால், மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவதைப் போல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் டீசல், பெட்ரோல் மானியம் பெற்றுத் தருவேன். இது என் தேர்தல் சபதம்’ என்றார் நாம் சிரிக்காமல் கேட்டுக்கொண்டோம்.

சுயேச்சைன்னா கேவலமாப் போச்சா?

பா.ஜெயராம் என்பவர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தார். வேட்பு மனு என்று எழுதிய காகிதத்தை உடலில் கட்டிக்கொண்டு வந்த அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நான் வேட்பு மனுவை திரும்பப் பெற வந்திருக்கிறேன் என்று அவர் சொல்ல, நீங்கள்தான் தாக்கலே செய்யவில்லையே? பிறகெப்படி திரும்பப்பெற முடியும் என்றனர். கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி நிருபர்களிடம் வந்த அவர், நான் பி.டி.ஆர்., பொன்.முத்துராமலிங்கம் போன்றவர்களை எதிர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவன். என்னுடைய அடிப்படைத் தேவையான தினம் 3 குவார்ட்டரும், 8 பாக்கெட் சிகரெட்டையும் கூட பூர்த்தி செய்ய முடியாத என்னிடம் டெபாசிட் 25 ஆயிரம் கேட்கிறார்கள். அதனால்தான் எனது வேட்பு மனுவை திருப்பிக் கொடுக்க வந்துள்ளேன்” என்றார். அவரது இந்தப் பேச்சால் ஆட்சியர் அலுவலகமே சிரிப்பில் ஆழ்ந்தது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மக்களவைத் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author