

மயூர்பஞ்ச்: வீட்டில் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால், மலை மீது ஏறிச் சென்று படித்த ஒடிசாவைச் சேர்ந்த சகோதரிகள், நீட் தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மஹுலாபங்கா கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியான கவுரங்க கத்துவா மற்றும் அங்கன்வாடி உதவியாளரான சுனிதா தம்பதியின் மகள்கள் யாஜ்ஞசேனி மற்றும் திவ்யசேனி. வறுமை காரணமாக, தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் சுய முயற்சியாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் படித்து, 2026-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று் சாதனை படைத்துள்ளனர்.
தங்கள் பகுதியில் போதிய மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால், அருகில் உள்ள மலைக்குன்றின் மீது ஏறி நள்ளிரவு வரை மொபைலிலேயே படித்தனர். இதில் அக்கா யாஜ்ஞசேனி தனது 3-வது முயற்சியிலும், அவரது வழிகாட்டுதலில் படித்த தங்கை திவ்யசேனி முதல் முயற்சியிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சகோதரிகளின் லட்சியம், எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவெடுத்து ஏழை எளிய மக்களுக்கு சேவை ஆற்றுவது மட்டுமே ஆகும்.