Published : 15 May 2023 05:37 AM
Last Updated : 15 May 2023 05:37 AM

எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் 4, 5-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம்

திருப்பூர்: எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதை ஒட்டி, வரும் 18-ம் தேதி மதுரையில் மாநில அளவிலான பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தொடக்கக் கல்வியில் ஏற்பட்ட தேக்கத்தை சரிசெய்ய மாநில அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது கரோனா தொற்றால் 2 ஆண்டுகள் பள்ளிகள் நேரடியாக செயல்படாத நிலையில், கற்றலில் மாணவர்களிடம் ஏற்பட்ட இடைவெளியை படிப்படியாக குறைக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் அரும்பு, மொட்டு, மலர் என 3 வகைகளாக பிரித்து மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்டவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயன் அளித்தது.

கரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பல்வேறு மனச் சிதறல்களுக்கு ஆளான நிலையில், அவர்களின் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் அரும்பு, மொட்டு மற்றும் மலருக்கான செயல்வழிக் கற்றல் பாடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி மாணவ, மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது தொடர்ந்து 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி வரும் 18-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 3 நாட்கள் மதுரையில் நடக்கிறது.

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 18 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து மாவட்ட அளவிலான பயிற்சி வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ம் தேதி தொடங்கி வரும் 3-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது” என்றனர்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டு, 2025-ம் ஆண்டுக்குள் கரோனா காலகட்டத்தில் பள்ளி செல்ல முடியாத அனைத்து குழந்தைகளும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதன் அடுத்தகட்டமாக தற்போது இத்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே விரிவாக்கம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற வேண்டும் என்பதன் முக்கிய நோக்கத்தையே, இத்திட்டத்தின் விரிவாக்கம் காட்டுவதாக சொல்கின்றனர் கல்வியாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x