Published : 01 Mar 2023 06:56 AM
Last Updated : 01 Mar 2023 06:56 AM

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல்20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கான இறுதிகட்ட பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைளை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடத்தப்பட வேண்டும்.

தேர்வுஅறைகளில் இருக்கை, மின்சாரம்,குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை சரிபார்க்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவிகேமரா பொருத்தி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்களை, அதே மையத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கக்கூடாது. தனியார் பள்ளிகளின்முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்கக்கூடாது.

சம்பந்தப்பட்ட பாடத்தை நடத்தும் ஆசிரியர்களை, அந்த பாட தேர்வுக்கான அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும் படை உறுப்பினராகவும் நியமிக்கக் கூடாது.

தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர தேர்வின்போது மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் வினாத்தாள், விடைத்தாள் மற்றும் இதர ஆவணங்களை முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன் வசம் வைத்திருந்து பார்த்து எழுதினால் அல்லது எழுத முயற்சித்தது கண்டறியப்பட்டால் அவரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். மேலும், குற்றத்தின் தன்மை அடிப்படையில் அடுத்த 2 பருவங்களுக்கும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்தால், அந்த பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தரதடை விதிக்கப்படும். விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், தேர்வரின் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவங்கள்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வர்கள் நேரத்தை காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x