Published : 22 Jan 2023 09:00 AM
Last Updated : 22 Jan 2023 09:00 AM

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கான தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கிராம ஊராட்சிகளில் உள்ள 5 நிலைக் குழுக்களில் ஒன்றாக கல்விக் குழு செயல்படுகிறது. இந்த கல்விக் குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம், பள்ளி வளர்ச்சிக்கு கிராம ஊராட்சிகளின் பங்களிப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

எனவே, கிராமசபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல் - கற்பித்தல், மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பாக, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.

வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறஉள்ளன. அண்மையில் நடைபெற்ற எஸ்எம்சி கூட்டத்தில் பள்ளிவளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை கிராமசபைக் கூட்டங்களில் பகிர்ந்துகொண்டு, விவாதித்து, உரிய தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமசபைக் கூட்டங்களில் எஸ்எம்சி குழுவின் தீர்மானங்களைப் பகிர்வதன் மூலம், பள்ளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு, பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க இயலும். அரசின் வழிகாட்டுதல்படி கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, உரிய தீர்மானங்கள் நிறைவேற்றிய விவரங்களை தொகுத்து,பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x