Published : 26 Jun 2022 06:21 AM
Last Updated : 26 Jun 2022 06:21 AM

மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் - கல்வித் துறை ஊழியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்

கோப்புப்படம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து நடப்பு கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்கள் ஜூன்21-ம் தேதி ராமேசுவரம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

பள்ளியில் புத்தகங்களை இறக்க சுமைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் லாரியில் இருந்து புத்தகங்களை இறக்கி மாணவிகளை சுமக்கச் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மண்டபம் மாவட்டக் கல்வி அலுவலர் முருகம்மாள் விசாரணை நடத்தினார்.

விசாரணை அடிப்படையில் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட பெருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் சண்முக சுந்தரம், வாலாந்தரவை அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் சே.கார்த்திகேயன், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் ப.கார்த்திகேயன், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி இரவு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x