Last Updated : 04 Sep, 2018 10:42 AM

 

Published : 04 Sep 2018 10:42 AM
Last Updated : 04 Sep 2018 10:42 AM

ஆயிரம் வாசல் 20: பெரு மாற்றத்துக்கான விதை

‘ஆயிரம் வாசல்’ தொடர் வெளியாகத் தொடங்கியதில் இருந்து, கல்வியை ஈடுபாடுடையதாக மாற்றுவது எப்படி, குழந்தைகளின் ஆளுமையை வளர்த்தெடுப்பது எப்படி என வாசகர்கள் தீவிரமாக உரையாடத் தொடங்கிவிட்டனர். இதை எனக்கு உணர்த்தியவை வாசகர்கள் எழுதிய கடிதங்களே. ‘எங்கள் வகுப்புகளில் நீங்கள் குறிப்பிட்ட மாற்றுப் பள்ளிகளின் கற்பித்தல் முறைகளை நடைமுறைப் படுத்தினோம்.

அதனால் ஆசிரியர்கள் புத்துயிர் பெற்றோம். எங்களின் பணி வகுப்பறையில் பாடத்திட்டத்தை மட்டுமே புகட்டுவது என்பதையும் தாண்டியது என்பதை உணர முடிந்தது. நாங்கள் செய்ய வேண்டியதைச் சாத்தியமாக்கும் இடமாக பள்ளிகளை எங்களால் பார்க்க முடிகிறது’ என ஆசிரியர்கள் பலர் கடிதம் எழுதியிருந்தனர்.

நெகிழ வைத்த கோரிக்கைகள்

‘நாகர்கோவிலில் இருக்கும் எங்கள் பள்ளியை மாற்றுப் பள்ளியாக மாற்றியமைக்க ஆசைப்படுகிறோம்.’ ‘தேவ கோட்டையில் இருக்கும் நாங்கள் மாற்றுப் பள்ளிகளின் வித்தியாசமான செயல்களை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.’

‘போடிநாயக்கனூரில் உள்ள எங்கள் பள்ளியைப் பார்வையிட்டு எழுத முடியுமா?’ என்பது போன்ற பல பகிர்தல்கள், கோரிக்கைகள் நமது கல்வியின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பவையாக உள்ளன. சில நல்ல முயற்சிகள் நடந்துவருவது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளிக்கிறது.

இளைஞர்களின் மனம்

‘நீங்கள் எழுதிவரும் மாற்றுப் பள்ளிகளில் பணி புரிய விரும்புகிறேன். அறிமுகப்படுத்த முடியுமா?’, ‘இது போன்ற பள்ளிகளில் பணிபுரிவதற்குத் தேவையான அறிவுத் திறனை அளிக்கக்கூடிய கல்லூரிப் படிப்புகள் உள்ளனவா?’ என்பன போன்ற கேள்விகள் இளைஞர்களிடம் இருந்து வருகின்றன. மாற்றுக் கல்வியை மதிக்கும் போக்கு இளைய சமூகத்தின் மத்தியில் அதிகரித்திருப்பதை இவை காட்டின.

மேலும், இது நாள்வரை இந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தென்படுகிறது. முக்கியமாக மாற்றுக் கல்வியை நடைமுறைப்படுத்த இவர்களுடைய மனம் துடித்துக்கொண்டிருக்கிறது.

விவசாயிகளை அழைக்கும் பள்ளி

ஒரு பள்ளியை அண்மையில் தொடர்புகொண்டபோது அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பது தெரிந்தது. மீனவர், விவசாயி எனப் பல தரப்பட்ட நபர்களை அழைத்துப் பள்ளிகளில் உரையாடச் செய்வதும் தெரிந்தது. இதுபோல் பல பள்ளிக் கல்விப் பணியில் ஈடுபடுபவர்கள் வித்தியாசமான விஷயங்களைத் தேட முயல்வதையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள முற்படுவதையும் காண முடிந்தது.

நம்பிக்கையளிக்கும் பள்ளிகள்

தத்துவ அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மாற்றுப் பள்ளிகளுக்குப் பயணித்தவரும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வருமான சத்தியமூர்த்தி குறிப்பிடும்போது, “இப்பள்ளிகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை உற்றுக் கவனிப்பது அவசியமாகிறது.

தலித்துகள், மலைவாழ் மக்கள், விவசாயக்கூலிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் சந்ததிகள் கல்வி பெற்றாக வேண்டும் என்பதே மாற்றுப் பள்ளிகளின் அடிநாதமாக உள்ளது. கல்வியின் மூலம் மட்டுமே இத்தனை காலம் நசுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான பாதையை அமைத்துத் தர முடியும் என்பதால், இந்தப் பள்ளிக்கூடங்கள் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன” என்றார்.

குறையும் இடைவெளி

கல்வியாளர்களான மாடசாமி, வ.கீதா, ச.தமிழ்ச்செல்வன், லதா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஆயிஷா நடராஜன், பிரபா கல்விமணி போன்றோர் தங்கள் புரிதல்களையும் அனுபவங்களையும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டு இந்தத் தொடருக்கு உத்வேகமும் உந்துதலும் அளித்தனர். பள்ளி நிர்வாகம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் இடையில் வரையறுக்கப்பட்டுள்ள இடைவெளியை இந்த மாற்றுப் பள்ளிகள் கடந்துள்ளன என்பதை இந்த ‘ஆயிரம் வாசல்’ தொடர் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சமூகத்தின் இணைப்புக் கண்ணி

கல்வி என்பது மொழியையும் அறிவியலையும் கணிதத்தையும் மட்டும் உள்ளடக்கியதல்ல; அது ஒட்டுமொத்த வாழ்வையும் உள்ளடக்கியது. ஒரு குழந்தையை முழு மனிதனாக உருவாக்குவதே கல்வியின் அடிநாதம். சமூகத்தின் இணைப்புக் கண்ணியே கல்வி. இன்று காலம் மாறிவிட்டது. கல்வி சார்ந்த பொறுப்பு நீர்த்துப் போனது மட்டுமல்லாமல்; அது பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே உள்ளது.

நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்

நீர்த்துப்போன கல்வி சார்ந்த பொறுப்புணர்வை மீட்டு எடுப்பதே கல்விப் புலத்தில் இயங்கிகொண்டிருக்கும் என்னைப் போன்ற செயற்பாட்டாளர்களின் இலக்கு. நாங்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள் அல்ல என்பதை ‘ஆயிரம் வாசல்’ தொடருக்குக் கிடைத்த வரவேற்பு உணர்த்தியது. எந்த மாற்றமும் ஒரு சிறு புள்ளியில்தான் தொடங்கும். ‘ஆயிரம் வாசல்’ தொடரும் ஒரு சிறு புள்ளிதான். அது பெரும் மாற்றத்துக்கான விதையாக இருக்கும் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

(நிறைவுபெற்றது)
கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x