Published : 10 May 2024 04:41 PM
Last Updated : 10 May 2024 04:41 PM

பர்மிங்காம் பல்கலைக்கழகம் - சென்னை ஐஐடி 2வது இணை முதுகலைப் பட்டப்படிப்பு தொடக்கம்

சென்னை: பர்மிங்காம் பல்கலைக்கழகமும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து நிலையான எரிசக்தி அமைப்புகள் தொடர்பான முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்திற்கான விண்ணப்பங்களும் இப்பல்கலைக்கழகங்களால் திறக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இணை முதுகலை பட்டப்படிப்பு கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருவதால் புதிய படிப்பில் பட்டதாரிகளாக தேர்ச்சிபெறுவோர் நிபுணர்களாக செயல்படுவார்கள்.

இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து வழங்கும் ஒரே பட்டத்தைப் பெறுவதற்கு முன் மாணவர்கள் சென்னையிலும் பர்மிங்காமிலும் கல்வி கற்பார்கள். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து தனிநபர் ப்ராஜக்ட்களை மேற்கொள்வார்கள். தற்போதைய சூழலில் சவால்களை எதிர்கொள்வது பற்றி தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் அதுதொடர்பான படிப்புகளில் பர்மிங்காம் பல்கலைக்கழகம் நீண்ட நெடிய அனுபவத்தை உடைய கல்வி நிறுவனமாகும். பிரிட்டனில் முதலாவது பொது அணுகல் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையம், படகுகள் தொடங்கப்பட்டது முதல் ஆப்பிரிக்காவில் கோல்ட்செயின் தொழில்நுட்ப மேம்பாடு, பெரிய அளவிலான அணுமின்சக்தி பயன்பாட்டு நிலையங்கள் வரை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பர்மிங்காம் எரிசக்தி நிறுவனம் (BEI) கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்குள் பலமுனை எரிசக்தி ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய ஒருங்கிணைப்பு, அடையாளத்தை வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட முதலாவது முயற்சியாகும்.

மாணவர்கள் பர்மிங்காம் அல்லது சென்னை ஐஐடி-யில் தங்கள் படிப்பை நிறைவு செய்யும் வகையில் இப்பாடத்திட்டம் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. சென்னை ஐஐடி-ல் தங்கள் படிப்பைத் தொடங்கும் மாணவர்கள் குறுகிய தொழில்துறை வேலைவாய்ப்புடன் நிறைவு செய்வார்கள். அதன்பின்னர் மாணவர்களுக்கு இரு வழிகள் உள்ளன.

வாய்ப்பு 1- பர்மிங்காமில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்ட்டுடன் 12 மாதங்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கலாம்.

வாய்ப்பு 2- இங்கிலாந்தில் 6 மாதங்கள் கல்விகற்ற பின்னர், சென்னைக்கு திரும்பி சென்னை ஐஐடி-ல் இப்படிப்பை நிறைவு செய்யலாம். அத்துடன் சென்னை ஐஐடி-ல் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்டையும் மேற்கொள்ளலாம்.

இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் 6 மே 2024 முதல் கிடைக்கும். மாணவர் சேர்க்கைக்கான கடிதங்கள் 26 ஜூன் 2024 முதல் அனுப்பப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.- https://ge.iitm.ac.in/uob/sustainable-energy-systems/

இந்த பாடத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த பர்மிங்காம் பல்கலைக்கழக துணைவேந்தரும், முதல்வருமான பேராசிரியர் ஆடம் டிக்கெல் கூறும்போது, “எங்களின் இரண்டாவது இணை முதுகலைப் படிப்பின் மூலம் இரு நாடுகளில் படிப்பதற்கு அற்புதமான புதிய வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது. நிபுணத்துவம், தொழில்துறை இணைப்புகளின் மூலம் சென்னை ஐஐடி, பர்மிங்காம் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே பயனடையும். வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் நிலையான ஆற்றல் அமைப்புகள் குறித்த அடிப்படைக் கொள்கைகளைக் கற்பதன் மூலம் உலகளாவிலான அனுபவத்தைப் பெறுவார்கள். அவர்களுக்கு தனித்துவமான தொழில்முறை அனுபவம் கிடைப்பதுடன், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடுவதில் மதிப்புமிக்க தொழில் பங்களிப்பையும் வழங்க உதவும்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவிலும், பர்மிங்காமிலும் உள்ள இரு முன்னணிக் கல்வி நிறுவனங்களில் படிப்பதுடன், வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு நிலையான ஆற்றல் குறித்த உலகளாவிய அனுபவமும், தொழில்துறையில் நேரடிப் பயிற்சியும் அனுபவமும் கிடைக்கும்.

அடிப்படை ஆராய்ச்சியின் மூலம் தொழில்துறை பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்த பர்மிங்காம் எரிசக்தி நிறுவனத்தின் நிபுணத்துவத்தையும், கார்பனைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி-ன் தனிச்சிறப்பையும் மாணவர்கள் அறிந்து பயன்பெற முடியும்.

நிலையான எதிர்காலத்தை உருவாக்க உதவும் எரிசக்தி அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்த பல்துறை பாடநெறி கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்ப மேம்பாடு - பொறியியல், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் நிகர பூஜ்ஜிய கார்பன் இலக்குகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.

எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு, சூரிய ஒளி மற்றும் அணு மின்சக்தி உள்ளிட்ட தற்போதைய எரிசக்தி அமைப்புகளின் அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் மாணவர்கள் கற்றறிந்து கொள்ள முடியும்.

இத்திட்டம் குறித்து விரிவாகப் பேசிய சென்னை ஐஐடி டீன் (குளோபல் எங்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, “தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இணைப் பாடத்திட்டத்தைத் தொடர்ந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் சென்னை ஐஐடி இணைந்து புதிய படிப்பை வெற்றிகரமாக தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

கல்வியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை உருவாக்குவோர் ஆகிய பின்னணிகளுடன் கூடிய ஆராய்ச்சி ஊழியர்கள் மூலம் பாடநெறி உள்ளடக்கம் வெளியிடப்படும்.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் லார்ட் கரன் பிலிமோரியா கூறும்போது, “ரஸ்ஸல் குழுமத்தைச் சேர்ந்த பர்மிங்காம் பல்கலைக்கழகம் உலகின் முதல் 100 கல்விநிறுவனங்களில் முதன்மையானதாகும். நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் நீடித்து வரும் பிணைப்பு குறித்து பெருமிதம் கொள்கிறோம். இந்த புதுமையான இணை முதுகலைப் படிப்புகள் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியைத தொடர வாய்ப்பளிக்கின்றன. அத்துடன் அவர்களின் கல்வி சாதனைகள் இரு பல்கலைக்கழகங்களாலும் அங்கீரிக்கப்படுகின்றன” என்றார்.

சென்னை ஐஐடி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடைமுறைகளுக்கான விருது, உயர்சிறப்பு கல்வி நிறுவனத்துக்கான விருது ஆகியவற்றைப் பெற்றிருப்பதுடன், தொழில்நுட்பக் கல்வி, அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, தொழில்துறை ஆலோசனை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டதாகும். இக்கல்வி நிறுவனத்தின் புதுமையான பாடத்திட்டத்தின் பயன்களை மாணவர்கள் பெற முடியும். தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் முதல்தர பொறியியல் பல்கலைக்கழகமாக ஐஐடி மெட்ராஸ் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

2022 நவம்பரில் சென்னைக்கு வருகை தந்தபோது பேராசிரியர் ஆடம் டிக்கெல் - ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் இடையே முதலாவது இணை முதுகலைப் பாடத்திட்டம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தரவு அறிவியல், எரிசக்தி அமைப்புகள், உயிரிமருத்துவப் பொறியியல் போன்ற ஆய்வுப் பகுதிகளில் இணைந்து செயல்படுவது என இருதரப்பு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். பிப்ரவரி 2022-ல் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது இருகல்வி நிறுவனங்களும் தங்களது கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த விருப்பம் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x