Published : 23 Apr 2024 06:50 AM
Last Updated : 23 Apr 2024 06:50 AM

ஆர்வத்துடன் திட்டமிட்டு படித்தால் சிறந்த துறைசார் வல்லுநராகலாம்: பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டி தொடர் நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

சென்னை: ஆர்வத்துடன் திட்டமிட்டுப் படித்தால் சிறந்த துறைசார் வல்லுநராக வர முடியும் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் ஆகியன இணைந்து வழங்கின.

கடந்த ஞாயிறன்று (ஏப்.21) நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி தொடரின் முதல் நிகழ்வில், ‘ஃபேஷன் டிசைன் & டெக்னாலஜி துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

ஃபுட்வியர் டிசைன் & டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்டின் ஃபேஷன் டிசைனிங் துறைத்தலைவர் பேராசிரியர் ஷப்ரின் ஃபர்ஹானா: இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை முன்னரே திட்டமிட்டுக் கொள்கிறார்கள். அழகுபடுத்துதல், நவீனமாக உடையணிதல் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் விரும்பிப் படிக்கும் துறையாக ஃபேஷன் டெக்னாலஜி துறை உள்ளது. பிளஸ் 2-வில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் இந்த துறையில் சேர்ந்து படிக்க முடியும்.

இந்த துறை சார்ந்த படிப்புகளை வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன. ஒவ்வொன்றிலும் சில பாட வேறுபாடுகள் இருக்கும்.

இதில் B.Des என்பது நான்காண்டு கால படிப்பாகும். B.Sc என்பது மூன்றாண்டுகால படிப்பாகும். இதிலுள்ள பல்வேறு துறைகளில் நமக்குப் பிடித்தமான துறையில் சேர்ந்து நாம் அந்த துறையின் வல்லுநராக வர முடியும்.

சென்னை அசோக் லேலண்ட்டின் ஸ்டைலிங் உதவி பொது மேலாளர் ஏ.தனசேகரன்: இன்றைக்கு டிசைன் & டெக்னாலஜி துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் புதுமையான சிந்தனையும் கற்பனை ஆற்றலும் உடையவர்களாக இருக்க வேண்டும். வித்தியாசமாகவும் கிரியேட்டிவாகவும் சிந்திக்கும்போது பல புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கும். தனது புதிய கண்டுபிடிப்பை நன்றாகப் படம் வரைந்து விளக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதை நன்றாக விளக்கிச் சொல்லக்கூடிய திறன் இருந்தாலே போதும்.

இத்துறையில் அரசு வேலை வாய்ப்புகளும், தனியார் துறைவேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளன. மேலும், புதிய தொழில் முனைவோர்களாக மாற விரும்புபவர்களுக்கு இது நல்ல பல வாய்ப்புகளை வழங்கும் துறையாக உள்ளது. விஷுவல் மீடியாவிலும் நல்ல ஊதியத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த துறையை விருப்பப்பாடமாகத் தேர்வுசெய்து, ஆர்வத்துடன் திட்டமிட்டுப் படித்தால் துறைசார் வல்லுநராக வர முடியும்.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற சொல் வழக்கானது நமது தமிழ்ப் பண்பாட்டின் ஆடை கலாச்சாரத்தை உணர்த்துவதாக உள்ளது. நம் அன்றாட வாழ்வில் காலை நடைப்பயிற்சிக்கு ஓர் உடை, அலுவலகம் செல்ல ஓர் உடை, இரவு உறங்கச் செல்ல ஓர் உடை, திருமணம், திருவிழா உள்ளிட்ட விழாக்களுக்கு ஓர் உடை என ஆடைகள் நம் வாழ்வில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன.

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களின் வெளியுலகத் தோலாகத் தொடரும் ஆடைகளுக்கான சந்தை மிகப் பெரிது. அதில் வேலைவாய்ப்புகளும் ஏராளம். ‘ஃபேஷன் டிசைனர்’ எனும் பெயரால் பொதுவெளியில் அறியப்படும் ஆடை வடிவமைப்பு நிபுணர், பலவகையான ஆடைகளை நவீன காலத்திற்கேற்ப உருவாக்கித் தந்து, மனிதர்களை அழகுபடுத்துகிறார்கள். ஃபேஷன் டிசைன் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி துறையில் இன்றைக்கு இருக்கும் வேலைவாய்ப்புகளை அறிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டுப் படித்தால் வாழ்வின் உயரங்களை அடைந்திட முடியும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலளித்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/watch?v=niTUilZJiF8 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x