Published : 22 Feb 2024 11:20 AM
Last Updated : 22 Feb 2024 11:20 AM

5-ம் வகுப்பு வரை ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ்; சென்னை பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை: மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்து மேயர் பிரியா அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாமன்ற கூட்டத்துக்கு பட்ஜெட் ஆவண பெட்டியுடன் வந்த மேயர் ஆர்.பிரியா. அருகில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா . படம்: ம.பிரபு.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவ, மாணவிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் ஆர்.பிரியா அறிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024-2025-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ஆர்.பிரியா நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார். அப்போது கல்வித்துறை தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

வரும் கல்வி ஆண்டில் (2024-2025) மொத்தமுள்ள 419 மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடைகள் ரூ.8.5 கோடி செலவில் வழங்கப்படும். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி 2-வது கட்டமாக 255 மாநகராட்சி் பள்ளிகளில் தலா 4 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.7.64 கோடி செலவில் பொருத்தப்படும்.

208 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ரூ.3.59 கோடியில் ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்கப்படும்.

உடனடி பழுது பார்க்கும் பணிக்காக 81 பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.32 கோடி பராமரிப்பு நிதி வழங்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் திறமையானவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், ‘ஸ்டெம்' சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் என்சிசி மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படும். 419 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 லட்சம் செலவில் அடையாள அட்டை வழங்கப்படும்.

கல்வி சுற்றுலா

வரும் கல்வி ஆண்டில் 130 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படிக்கும் 24,700 மாணவர்கள் சென்னையைச் சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

300 மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கு ரூ.40.32 லட்சம் மதிப்பில் புதிய பாடத்திட்டங்களுடன் இலவச வண்ண புத்தகங்கள் வழங்கப்படும். மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வளர்இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் வட்டாரத்துக்கு ஒருவர் வீதம் 10 வட்டாரங்களில் 10 உளவியல் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவர்.

விளையாட்டு பயிற்சி

மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, செஸ், கேரம், டேக்வாண்டோ, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்த பயிற்சிஅளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் பள்ளிகளின் முன்னேற்றத்தை காட்சிப்படுத்தி பாராட்டு விழாக்கள், ஆண்டுவிழாக்கள் நடத்தப்படும். ஜென்டர் கிளப் செயல்பட்டு வரும் 92 நடுநிலைப்பள்ளிகள், 28 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தடையை உடை' என்ற புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்.

தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 75,793 மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தின் வாசிப்பு திறன் மற்றும் எழுத்துத்திறனை மேம்படுத்தவும், அடிப்படை கணித்திறனை வளர்க்கவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 50 மா்ணவர்கள் ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையம், மும்பை பாபாஅணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்டஇடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களை தலைவராக கொண்டுகுழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும். மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் 2-ம் ஆண்டு யுகேஜி படித்து வரும் 5,944 குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x