Published : 04 Feb 2024 12:17 PM
Last Updated : 04 Feb 2024 12:17 PM

'புதுமைப்பெண் திட்டத்தால் தன்னம்பிக்கை பிறக்கிறது' - தஞ்சை மாணவி பாராட்டு

மாணவி பூர்ணா

சென்னை: "புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது. என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது. படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழக முதல்வர் இருப்பிடம் நோக்கி என் கரங்கள் குவிந்து நன்றியை செலுத்துகின்றன" என்று இத்திட்டத்தின் மூலம் பயனைடந்து வரும் மாணவி பூர்ணா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஓலைக் குடிசைகளில் உள்ள சிறிய துவாரங்கள் வழியே கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஒரு குழல்போல் உள்ளே பாய்வதைப் பார்த்திருப்போம். இந்தக் குடிசை இருக்குமிடம் ரெங்கநாதபுரம், நடுப்படுகை. குடிசையின் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு. மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் உள்ள படுகையில்தான் இந்தக் குடிசை உள்ளது. இந்தப் படுகையில் ஏறத்தாழ 35 குடும்பங்கள் உள்ளன. இந்தப் படுகை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. இந்தக் குடிசையில் இருந்து பட்டீஸ்வரம் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். அப்படிச் சென்று படித்து பன்னிரண்டாம் வகுப்பில் (பிளஸ் 2) தேர்ச்சி பெற்றவர்தான் பூர்ணா. பூர்ணா, தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் காமாட்சி, கல்லூரியில் படிக்கும் தம்பி பால சுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தக் குடிசையில்தான் வாழ்கின்றார். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

பள்ளிப்படிப்பை முடித்து ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதப் பாடத்தைத் தேர்வு செய்து படித்து வருகிறார். பட்டீஸ்வரத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் செல்கிறார்.இந்தப் பூர்ணாவுக்கு மாதம் ரூ.1,000 (ரூபாய் ஆயிரம்) வங்கி வழியாக புதுமைப் பெண் திட்டத்தால் சென்று சேர்கிறது.

இந்தப் பணம் கிடைத்துள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடையும் பூர்ணா, இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது. என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது.படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழக அரசுக்கு, தமிழக முதல்வருக்கு எனது நன்றிகள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x