Published : 04 Feb 2024 11:56 AM
Last Updated : 04 Feb 2024 11:56 AM

ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங்கர்களின் அற்புதக் கலவை: பும்ராவின் மறக்க முடியாத ஸ்பெல்!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நல்ல பேட்டிங் பிட்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கர்களின் கலவையான பந்துவீச்சில் இங்கிலாந்தை 114/1-லிருந்து 253 ரன்களுக்குச் சுருட்டினார். பும்ரா 15.5 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது என்பது இங்கிலாந்தின் அதி தன்னம்பிக்கை பேட்டிங் வரிசையையே ஆட்டிப்பார்த்த அற்புதப் பந்து வீச்சாகும்.

அகமதாபாத்தில் ஒருமுறை கபில்தேவ் ஒரு மதிய வெயிலில் வலுவான மே.இ.தீவுகளுக்கு எதிராக 86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சுக்கு அடுத்ததாக பும்ராவின் இந்தப் பந்துவீச்சு மெச்சப்படுகிறது. அதுவும் பென் ஸ்டோக்ஸ் எப்படி கடந்த போட்டியில் அட்டாக்கிங் இன்னிங்ஸ் ஆடினாரோ, அதே போல் நேற்றும் ஆடினார். ஆனால் கடந்த டெஸ்ட்டில் பும்ராவிடம் பவுல்டு ஆனது போலவே இம்முறையும் பவுல்டு ஆனார். தனது இயலாமையை கடந்த டெஸ்ட் போட்டியிலும் முகபாவத்தில் காட்டினார். இந்த டெஸ்ட் போட்டியிலும் எப்படி ஆடினாலும் பவுல்டு ஆகிறதே என்ன இது என்று தனது வெறுப்பை வெளிப்படையாக முகபாவத்தில் காட்டினார்.

நல்ல பேட்டிங் பிட்சிலேயே பும்ரா இப்படி வீச முடியும் போது வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம் போட வேண்டியதுதானே என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அஸ்வின் பந்து வீச்சில் ஒன்றும் இல்லை. வரவர தேய்ந்து கொண்டு வருகிறார். காரணம் சுலபமான குழிப்பிட்ச்களில் வீசி வீசி அவருக்கு நல்ல பிட்ச்களில் பந்தை ஸ்பின் செய்யத் திணறுகிறார். எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகப் பிட்ச்கள் பற்றி பிசிசிஐ யோசிக்க வேண்டும்.

நேற்று எடுத்த 6 விக்கெட்டுகள் 71 பந்துகளில் எடுத்த விக்கெட்டுகள் ஆகும். ரோஹித் சர்மா அபாரமான ஒரு தருணத்தில் பும்ராவைக் கொண்டு வந்தார், பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. அதோடு பந்தை அதே இடத்தில் பிட்ச் செய்து வெளியேவும் எடுக்க இங்கிலாந்து பேட்டர்களிடம் விடையில்லை. ஜோ ரூட் அவுட் ஸ்விங்கருக்கு இரையானார். ஹைதராபாத் டெஸ்ட் ஹீரோ ஆலி போப்பிற்கு அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கர் வீச ஸ்டெம்ப் எகிறியது.

முன்னதாக ஜாக் கிராவ்லி 78 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். பும்ராவின் முதல் ஸ்பெல்லில் ஒரே ஓவரில் கிராவ்லி 4 பவுண்டரிகள் விளாசினார். அஸ்வினையும் குல்தீப்பையும் ஆக்ரோஷமாக எதிர்கொண்டார். கிராவ்லியை அக்சர் படேல் வீழ்த்த இந்திய அணிக்கு வழி பிறந்தது. முன்னதாக அபாய பென் டக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார். ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களுக்கு நன்றாக ஆடினார். ஆனால் பும்ரா பந்தில் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி. ஆவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்சம் லெக் திசை சார்பாக நின்றதைக் கவனித்த பும்ரா, பந்தை பிட்ச் செய்து லேசாக, வெகுலேசாக வெளியே எடுத்தார், எட்ஜ் ஆகி கில்லிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பென் போக்ஸ், குல்தீப் பந்தில் பவுல்டு ஆனார். ரெஹான் அகமது அடித்த ஷாட் மிட் விக்கெட்டில் கில்லின் அற்புதமான கேட்ச்சாக மாறியது.

ஹார்ட்லியும், பென் ஸ்டோக்ஸும் கவுண்டர் அட்டாக் செய்து 40 பந்துகளில் 47 ரன்களை விளாசினர். அஸ்வின் பந்து வீச்சு எடுபடவில்லை, 6வது முறையாக ஒரு இன்னிங்சில் விக்கெட் எதையும் வீழ்த்தாமல் முடித்தார் அஸ்வின். பும்ரா, பென் ஸ்டோக்ஸின் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்க்கும் போது அது அவரது 150வது விக்கெட்டானது. அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் பும்ரா. இவரது பார்முக்கு ஹார்ட்லியையும் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் எடுப்பது பெரிய காரியமல்ல. மொத்தமாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெயிலான ஒரு மதிய வேளையில் பும்ராவின் அற்புதமான ஒரு வேகப்பந்து வீச்சு நீண்ட காலத்திற்கு நெஞ்சை விட்டு அகலாதது.

1980-களின் மே.இ.தீவுகளின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் பும்ராவையும் ஒரு இந்திய பந்து வீச்சாளராகச் சேர்த்து விடலாம். அம்மாதிரியான ஒரு ஸ்பெல் இது.

பும்ரா இந்த ஸ்பெல்லுக்குப் பிறகு அளித்த பேட்டியில், “இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டுமெனில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டும். நமது மரபான ஸ்விங் பவுலிங்கைவிட ரிவர்ஸ் ஸ்விங்கைத்தான் முதலில் கற்றுக் கொண்டேன்” என்றார். இந்தியப் பிட்ச்கள் குறித்து இத்தனை தீர்க்கமான பார்வையுடையவரையும் ஷமி போன்ற ஜீனியசையும் வைத்துக் கொண்டு, ஜடேஜாவுக்காகவும் அஸ்வினுக்காகவும் குழிப்பிட்ச்களைப் போட்டு அவர்கள் நல்ல பிட்சில் ஸ்பின் செய்ய முடியாமல் தடுமாற விடுவதும் ஏன் என்பதை பிசிசிஐ யோசிக்க வேண்டும். ஸ்ரீநாத் போன்ற பவுலர்களை இந்தக் குழிப்பிட்ச்கள்தான் பெரிய பவுலர்களாக வளர விடாமல் செய்து விட்டது. ஆகவே, பும்ரா, ஷமி காலக்கட்டத்தை நன்றாகப் பயன்படுத்தினால் இந்திய பேட்டர்களும் வெளிநாடுகளில் சுலபமாக பேட்டிங்கில் பிரமாதப்படுத்த முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x