Published : 23 Nov 2023 04:44 PM
Last Updated : 23 Nov 2023 04:44 PM

ஆவுடையார்கோவில் அருகே ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி கட்டிடம்: மாணவர்களை அனுப்ப தயங்கும் பெற்றோர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சின்னப்பட்டமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக் கட்டிடம்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சின்னப்பட்டமங்கலத்தில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சின்னப்பட்டமங்கலத்தில் கடந்த 1971-க்கும் முன்பிருந்தே அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சின்னப்பட்டமங்கலம், பெரியபட்டமங்கலம், நல்லிக்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இதனிடையே, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறி 2019-ல் பள்ளி மூடப்பட்டு, நூலகமாக மாற்றப்பட்டது. பொன்விழா கண்ட பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்வித் துறை அலுவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அலுவலர்கள் உத்தரவாதம் அளித்தனர். பின்னர், மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் அருகே சின்னப்பட்ட மங்கலம் அரசு தொடக்கப் பள்ளிக்கு
செல்லும் சாலையின் அவலநிலை.

தற்போது இப்பள்ளியில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள்பணிபுரிகின்றனர். இப்போது மழைக் காலமாக இருப்பதால் லேசான மழைக்கே வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகுகிறது. கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்குச் செல்லக்கூடிய சாலையும் குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: சின்னப்பட்டமங்கலம் அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னப்பட்ட மங்கலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள அரசு
தொடக்கப் பள்ளி கட்டிடம்.

கொத்தமங்கலம், நல்லிக்குடி பகுதியில் இருந்து ஆட்டோவில் மாணவர்கள் வருகின்றனர். சாலை மோசமாக இருப்பதால் ஆட்டோவும் இயக்க மறுக்கின்றனர். இதனால், மாணவர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியது, ‘‘இப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்றோ, பழுது நீக்க வேண்டும் என்றோ எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. கட்டிடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x