Published : 23 Nov 2023 03:57 PM
Last Updated : 23 Nov 2023 03:57 PM

வெளிநாடுகளில் படிக்க ஆங்கிலத் தகுதித் தேர்வு கட்டாயமா? - ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் படிக்க ‘TOEFL’, ‘IELTS’ போன்ற தகுதித் தேர்வுகள் அவசியம். ஆனால், இந்தத் தகுதித் தேர்வுகள் எழுதாமலேயே வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவும் முடியும்.

ஆங்கிலத் தகுதித் தேர்வுகள்: வெளிநாடுகளில் படிக்கவும் வேலை செய்யவும் பல்வேறு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலத் தகுதித் தேர்வுகள் இருக்கின்றன. இதில் பொதுவாக ‘TOEFL’ தேர்வு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘IELTS’ தேர்வு உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் ‘TOEFL’ஐவிட ‘IELTS’ தேர்வைப் பெரிதும் விரும்புகின்றன. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள ‘dualingo’ தேர்வைப் பல அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ‘TOEFL’, ‘IELTS’ தேர்வுக் கட்டணங்களைவிட ‘dualingo’வின் கட்டணம் மிகக் குறைவு.

வெளிநாட்டில் படிக்க ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளும் திறன் மிக அவசியம். ஆங்கிலத் திறனை நிரூபிக்கவே இந்தத் தகுதித் தேர்வுகள் தேவைப்படுகின்றன. இதில் தேர்ச்சிபெறுவதன் மூலம் ஆங்கிலத் திறனை நிரூபிப்பது மிகவும் எளிதாகிறது. அதேவேளையில் உங்களுடைய ஆங்கிலத் திறன் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், எந்த ஆங்கிலத் தேர்வுகளையும் எழுதாமலேயே பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்துவிட முடியும்.

உதவும் பள்ளி மதிப்பெண்: பள்ளிப்படிப்பில் (10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு) ஆங்கிலத்தில் 70 - 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால், அதைச் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளங்கலைப் படிப்பில் சேர ஏற்றுக்கொள்கின்றன. என்றாலும், இளங்கலைப் படிப்பு சேர்க்கைக்கான இணையவழி நேர்முகத் தேர்வின்போது ஆங்கிலத் திறனைச் சோதித்த பிறகே சேர்க்கைக்கான அனுமதி கிடைக்கும்.

இளங்கலைப் படிப்பை முழுவதும் ஆங்கிலத்தில் படித்திருந்தால், படித்த கல்வி நிறுவனத்திலிருந்து ஆங்கிலவழியில் படித்ததற்கான (medium of instruction English) சான்றிதழைப் பெற்று, அதன்மூலம் முதுகலைப் படிப்பில் சேர ஆங்கிலத் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்.

ஆனால், இதிலும் இணையவழி நேர்முகத் தேர்வில் ஆங்கிலத் திறன் சோதிக்கப்படும். இந்த ஆங்கிலத் தேர்வுக்கான விலக்கைப் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வழங்கினாலும், எல்லாப் பல்கலைக்கழகங்களும் வழங்குவதில்லை. ஆக, சேர விரும்பும் பல்கலைக்கழகம் ஆங்கிலத் தகுதித் தேர்விலிருந்து விலக்கு வழங்குகிறதா என்பதைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து அறிந்துகொள்ள வேண்டும்.

செலவைத் தவிர்க்கலாம்: குறிப்பாக, முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்டி) வெளிநாட்டில் படிக்க விரும்பினால், சில பல்கலைக்கழகங்களைத் தவிர, ஆங்கிலம் பேசாத நாடுகளான நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத் தகுதித் தேர்வையோ ஆங்கில வழியில் படித்ததற்கான சான்றிதழையோ கேட்பதில்லை. நேர்முகத் தேர்வில் பேசும் ஆங்கிலம் திருப்திகரமாக இருந்தாலே போதுமானது. ஆனால், கணிசமான அமெரிக்க, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் படிப்புக்கு ஆங்கிலத் தகுதித் தேர்வைக் கேட்கலாம்.

அண்மைக் காலமாகச் சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் (The University of Dayton, Drexel University) ஆங்கிலத் தேர்வின்றி மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால், இளங்கலை/முதுகலைப் படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு வெளிநாட்டு மாணவர்களுக்கெனப் பிரத்யேகமாகப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் குறுகியகால தீவிர ஆங்கிலப் பயிற்சியில் (Intensive English course) சேர்ந்து ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆகவே, வெளிநாட்டில் படிக்கத் திட்டமிட்டால், முதலில் ஆங்கிலத் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். விலக்கு பெற முடியும் என்றால், ஆங்கில தகுதித் தேர்வுக்கட்டணம் (ரூ15,000-ரூ.25,000), பயிற்சி நிறுவனத்தைப் பொறுத்து ரூ.20,000 - ரூ.50,000) செலவை தவிர்க்க முடியும்!

- கண்ணன் கோவிந்தராஜ் | தொடர்புக்கு > merchikannan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x