Published : 20 Nov 2023 05:15 AM
Last Updated : 20 Nov 2023 05:15 AM

10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் வரும் 30-ம் தேதிக்குள் சரிபார்க்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

எமிஸ் வலைதளத்தின் விவரங்கள் அடிப்படையிலேயே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை நவ.30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். அதனால், இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்கள் நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மேலும், எக்காரணம் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பக் கூடாது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பகுதி 1-ல் தமிழை மொழிப் பாடமாக எழுதியாக வேண்டும். எனினும், சிபிஎஸ்இ போன்ற பிற பாடத் திட்டத்தில் படித்து நேரடியாக 9, 10-ம்வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழிப் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x