Published : 20 Nov 2023 07:14 AM
Last Updated : 20 Nov 2023 07:14 AM

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, 2 மகள்கள் ரயில் மோதி உயிரிழப்பு

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, 2 மகள்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, வேப்பம்பட்டு பகுதியில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, 2 மகள்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (48). இவரது மனைவி உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னைக்கு சென்று மனைவியை பார்ப்பதற்காக மனோகரன் நேற்று காலை 11.30 மணி அளவில், தன் மகள்கள் தர்ஷினி (18), தாரணி (17) ஆகியோருடன் வேப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயில் வருவது தெரியாமல் அவர்கள் 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், தந்தை மற்றும் 2 மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் கிடைத்து அங்கு வந்த திருவள்ளூர் ரயில்வே போலீஸார், மனோகரன், தர்ஷினி, தாரணி ஆகியோரின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் தர்ஷினி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தாரணி, பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பும் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

“கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்படி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, கிடப்பில் உள்ள வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக தொடங்கி, துரிதமாக முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ் குமார், செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

“இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணியை விரைவில் தொடங்கி, முடிக்க உரிய தீர்வு காணப்படும்” என்று வட்டாட்சியர் உறுதியளித்தார்.

இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x