Last Updated : 27 Jul, 2023 06:09 PM

3  

Published : 27 Jul 2023 06:09 PM
Last Updated : 27 Jul 2023 06:09 PM

PM-YASASVI | ரூ.1.25 லட்சம் வரை உதவித் தொகை பெற நுழைவுத் தேர்வு: 9, 10, 11, பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை: மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம்.

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு 2023-24-ம் நிதியாண்டில், கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு (OMR அடிப்படையில்) செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x