Published : 27 Jul 2023 05:36 PM
Last Updated : 27 Jul 2023 05:36 PM

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எப்போது திறப்பு? - அமைச்சர் சேகர்பாபு அப்டேட்  

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் | படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் தாமதம் ஆகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 27) அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கேள்விக்கு பதில் அவர், "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தளவில் உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பருவமழை காலங்களில் தண்ணீர் வடியும் வகையிலான மழை நீர் வடிகால்கள், அதிகளவு கூட்டம் சேருகின்ற நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல் துறை அலுவலகங்கள், மாற்றுப் பாதைகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள், வனத் துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை அமைத்திட கடந்த ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு எந்த வகையிலும் அசெளகரிகங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x