Last Updated : 28 Jun, 2023 07:11 PM

 

Published : 28 Jun 2023 07:11 PM
Last Updated : 28 Jun 2023 07:11 PM

புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் இலவச பயிற்சி - நவோதயா உறைவிடப் பள்ளியில் 25 இடங்களைப் பிடித்த கிராமப்புற மாணவர்கள்

நவோதயா நுழைவுத்தேர்வுக்காக வீட்டில் பயிற்சி தரும் அரசு பள்ளி ஆசிரியர் சசிகுமார்.

புதுச்சேரி: ஜவகர் நவோதயா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் கிராமப் பகுதிகளுக்கான 60 இடங்களில், புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் இலவச பயிற்சியால், அவரிடம் பயின்ற 25 கிராமப் பகுதி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும், புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா உறைவிடப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு அண்மையில் நடந்தது.அதில் கிராமப் பகுதிகளுக்கு 60 இடங்களும், நகரப் பகுதிகளுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இந்த இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

நவோதயா பள்ளியில் படிக்ககிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கூனிச்சம்பேடு பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியர் சசிக்குமார் இப்பள்ளியில் குழந்தைகளுக்கு இடம் கிடைக்க தொடர்ந்து இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். இம்முறையும் அவரிடம் படித்த மாணவர்கள் அதிகளவில் வென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் சசிக்குமார் கூறியதாவது: பிஎஸ்பாளையத்தில் எனதுவீடு உள்ளது. கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகள் பலரும் பள்ளி முடிந்து, மாலை வேளை மற்றும் வார விடுமுறை நாட்களில் நவோதயா பள்ளிக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக என்னிடம் வருவார்கள். எனது வீட்டில் வைத்து இலவச பயிற்சி அளித்து வருகிறேன். படிப்புடன் உணவும் ஏற்பாடு செய்து விடுவோம்.

மாணவர்களை அவர்களது பெற்றோர் அழைத்து வந்து வீட்டில் விடுவார்கள். நான் அளித்த பயிற்சியில், கடந்த 2018-ல்13 மாணவர்கள் நவோதயா நுழைவு தேர்வில் வென்றனர். அடுத்து 2019-ல் 20 பேர், 2020-ல் 10 பேர், 2021-ல் 27 பேர், 2022-ல்30 பேர் வெற்றி பெற்றனர். நடப்பாண்டில் மொத்தம் 35 மாணவர்களுக்கு இலவச பயிற்சி தந்தோம். அதில், 25 மாணவர்கள் நுழைவுத்தேர்வில் வென்றுள்ளனர்.

5-ம் வகுப்பு வரை இயல்பாக படித்து விட்டு. முதன்முறையாக போட்டித்தேர்வை கிராமப் பகுதியில் உள்ள இக்குழந்தைகள் எதிர்கொண்டு, வெற்றி பெறுவது சிறப்பான ஒன்று. இத்தேர்வு எப்படி இருக்கும் என்பதை தெரிவித்து, அதற்கு படிப்படியாக அவர்களை பழக்கப்படுத்துவது, அவர்கள் அதை உள்வாங்கிச் செய்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்தார்.

அடுத்தாண்டுக்கான தேர்வுக்கு தயாராகவும் மாணவர்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளனர். “கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நவோதயா பள்ளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம்” என்றும் ஆசிரியர் சசிக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x