Last Updated : 01 Feb, 2015 02:52 PM

 

Published : 01 Feb 2015 02:52 PM
Last Updated : 01 Feb 2015 02:52 PM

விவாதம்: பெண்களைத் துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு

பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கே மதத்தின் பெயரால் பிற்போக்குத்தனங்கள் வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டதிட்டங்களை அமல் செய்து வந்த மன்னர் அப்துல்லா 90 வயதில் இறந்துவிட்டார். துக்கம் கேட்பதற்காக இந்தியப் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

வழக்கமாக அணியும் மேற்கத்திய ஆடையிலேயே இந்தியாவிலிருந்து கிளம்பினார் மிஷேல் ஒபாமா. சவுதி அரேபிய மண்ணில் இறங்கியதும் அவரது உடை மாறிவிட்டது. முழுக்கப் போர்த்தப்பட்ட ஆடைக்கு மேலே, பெரிய அங்கி ஒன்றும் மாட்டியிருந்தார். தலையில் அணியச் சொன்ன ஸ்கார்ஃபை மட்டும் மறுத்துவிட்டார். எல்லோரிடமும் ஒபாமா கை கொடுத்தார். அருகில் இருந்த மிஷேல் கையை நீட்டியபோது, ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் கை கொடுக்கவில்லை. சவுதி அரேபியாவில் இருந்த நான்கு மணி நேரமும் மிஷேல் இயல்பாக இருக்கவில்லை. அவரது சங்கடம் முகத்தில் தெரிந்தது. சவுதி அரேபியத் தொலைக்காட்சிகள் மிஷேலை மட்டும் இருட்டடிப்புச் செய்ததாகச் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் மிஷேல் ஸ்கார்ஃப் அணியாததைப் பெரிய குற்றமாக விவாதித்தார்கள்.

பெண் என்றால் கட்டுப்பாடு?

அமெரிக்க அதிபரின் மனைவியாக இருந்தாலும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவராக இருந்தாலும் பெண் என்பதால், தங்கள் நாட்டுக்கு ஏற்றபடி ஆடை அணியச் சொல்கிறது சவுதி அரேபியா. தங்கள் நாட்டு சட்டப்படிதான் வரவேண்டும் என்று சொன்னால் ஒபாமாவையும் ஷேக்குகள் அணியும் கஃபியாவை அணியச் சொல்லியிருக்க வேண்டும். சரி, சவுதி அரேபிய மன்னர் குடும்பத்துப் பெண்கள் அமெரிக்கா சென்றால், மேற்கத்திய ஆடையை அணிவார்களா?

ஆடை என்பது அவரவர் கலாச்சாரம், விருப்பம், வசதி சார்ந்த விஷயம். எந்த நாட்டினராக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுதானே நியாயம். நாகரிகமும் கூட! ஆனால் மிஷேலின் ஆடையை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு எப்படி வந்தது?

வழக்கறிஞரும் அமெரிக்காவின் முதல் குடிமகளுமான மிஷேல் ஆடை மாற்றத்துக்குக் கண்டனம் தெரிவித்து, வழக்கமான ஆடையில் வந்திருக்க வேண்டாமா? பிற்போக்கு எண்ணங்களை வலியுறுத்தி வரும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று, ஆடையை மாற்றியதன் மூலம் மிஷேலும் அதற்கு அடிபணிந்துவிட்டதாகத் தானே அர்த்தம்? பெண்ணுரிமைகளுக்கான போராட்டங்கள் வலுவடைந்து வரும் சவுதி அரேபியாவில், மிஷேல் அடிபணிந்ததன் மூலம் தவறான முன்னுதாரணமாகிவிட்டார்.

மிஷேலின் ஆடை மாற்றம் இது முதல் முறை அல்ல. வாட்டிகனில் போப்பாண்டவரைச் சந்தித்தபோது கறுப்பு ஆடையில் சென்றார். இந்தோனேஷியாவில் மசூதிக்குச் சென்றபோது முழுக்கப் போர்த்தப்பட்டு, தலையில் ஸ்கார்ஃப் அணிந்து சென்றார். செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் ஆடை மாற்றம் செய்துகொள்ள வேண்டிய சூழல் உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால் ஆண்கள் தங்கள் ஆடைகளிலேயே எந்த நாட்டுக்கும் எந்த இடத்துக்கும் சென்று வர முடிகிறது.

ஒரு நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் உடை சரியில்லை என்று இன்னொரு நாடு கருதினால், ஒட்டுமொத்தமாக அந்த நாட்டு மக்களை, அவர்கள் கலாச்சாரத்தை அவமானப்படுத்துவதாக இருக்காதா?

மிஷேலின் ஆடை மாற்றத்தையும் சர்ச்சைகளையும் கண்டிக்க வேண்டிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ‘மிஷேல் நாகரிகமாகத்தான் உடை அணிந்தார்’ என்று விளக்கம் அளித்துள்ளன. ‘ஹிலாரி கிளிண்டன், லாரா புஷ் போன்றவர்கள் சவுதி அரேபியாவில் ஸ்கார்ஃப் அணிந்ததில்லை. அதனால் மிஷேலும் அணியவில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்.

கவலைப்படுவதற்கும் விவாதிப்பதற்கும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் போது, மிஷேலின் ஆடை குறித்துப் பேசித் திரியும் உலகை என்னவென்று சொல்வது?

பெண்களை மனிதர்களாக மதிக்காமல் உடைமையாக, தங்கள் குடும்ப கெளரவமாக நினைப்பதால்தான் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு, பெண்களின் ஆடைகளே காரணம் என்று சொல்லி வருகின்றனர். இப்படிப் பெண்கள் மீது ‘ஆடை’ என்ற ஒரே விஷயத்தைப் பலவிதங்களில் பல்வேறு வடிவங்களில் திணிக்கும் சமூகச் சூழலை மாற்ற வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. மிஷேலாக இருந்தாலும் சரி, சவுதி அரேபியப் பெண்களாக இருந்தாலும் சரி. உலகில் உள்ள எல்லாப் பெண்களுமே ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x