Published : 19 Aug 2017 04:42 PM
Last Updated : 19 Aug 2017 04:50 PM
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இவ்வாறான சலசலப்புகள் எழும்போதெல்லாம் அதிமுக தொண்டர்களோ தலைமை அலுவலகத்திலும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் குவிந்து கலைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.
க்ரீன்வேஸ் சாலை, ராயப்பேட்டை என்று அதிமுக செய்திகள் தவழும் இடங்களின் பட்டியலில் தற்போது அடையாற்றில் உள்ள டிடிவி.தினகரன் இல்லமும் இணைந்துள்ளது. எப்போது எந்த கேள்வி கேட்டாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் புன்னகையுடனுமே பதிலளிக்கிறாரே எனப் பலரையும் சிந்திக்க வைக்கும் அளவுக்கு தோனிக்கு அடுத்தபடியாக ‘கேப்டன் கூல்’ (captian cool) என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு பாணியை தனக்காக உருவாக்கிவைத்துள்ளார் தினகரன்.
இப்படி அதிமுக இரண்டாகி இப்போது மூன்றாகி நிற்கும் நிலையில் அடுத்தது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்ச்சைகள் விலகாத அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? அதுவும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகைக்கு முன்னதாகவே அணிகள் இணைப்பு நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
நீட் தேர்வு குளறுபடி நீங்காது பரிதவிக்கும் மாணவர்கள், வேதனையில் துவண்டு கிடக்கும் விவசாயிகள், மேகேதாட்டு பிரச்சினை என இத்தனை விவகாரங்களையும் கிடப்பில் போடும் அளவுக்கு அணிகள் இணைப்புக்கான பணிகளே மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் தமிழகத்தின் தற்போதையை பிரச்சினைகளுக்கு எல்லாம் மத்திய அரசிடம் வலுவான குரல் எழுப்பப்படுமா? ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க இருந்த இரும்புக்கோட்டையாக அதிமுக மீண்டும் உருவெடுக்குமா? இல்லை, "ஜெயலலிதா இல்லாத அதிமுக எங்களுக்கு சாதகமானது. ஆனால், அது ஒன்றுபட்ட அதிமுக-வாக இருக்க வேண்டும்" என பாஜக பிரமுகர் ஒருவர் கூறியதுபோல் கைப்பாவையாக இருக்குமா?
இரு அணிகள் இணைப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்...