Last Updated : 21 Jan, 2015 02:37 PM

 

Published : 21 Jan 2015 02:37 PM
Last Updated : 21 Jan 2015 02:37 PM

சினிமாவில் கருத்துரிமையை பாதிக்குமா தணிக்கை வாரிய பாஜக ஆதிக்கம்?

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்படத் தணிக்கை வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சக அதிகாரிகள் அழுத்தம், ஊழல் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து லீலா சாம்சன் உட்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சர்ச்சையை கிளப்பினர்.

மத்திய தகவல் - ஒலிபரப்பு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தலையீட்டின் பேரில் தணிக்கை வாரியம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும்கூட புதிய சர்ச்சை ஒன்று உதயமாகியுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தணிக்கை வாரியத்தில் வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் தணிக்கை வாரியத் தலைவர் பஹ்லஜ் நிஹலானி, ஜீவிதா ராஜசேகர், எஸ்.வி.சேகர், வானி திரிபாதி டிக்கூ, ஜார்ஜ் பேக்கர், ரமேஷ் படாங்கே இவர்களை சுற்றித்தான் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

பாஜகவுடன் நெருக்கம்

வாரிய உறுப்பினர்களுக்கு பாஜகவுடன் இருக்கும் நெருக்கம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களாவன:

# ஜீவிதா ராஜசேகர், இவர் தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி இவர் நரேந்திர மோடியைப் பற்றி ஒரு பிரச்சாரப் பாடலை வெளியிட்டிருக்கிறார்.

# எஸ்.வி.சேகர், இவர் அதிமுகவில் இருந்து விலகி கடந்த 2013-ல் பாஜகவில் இணைந்தார்.

# வாணி திரிபாதி டிக்கூ, பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவர் இவர்.

# ஜார்ஜ் பேக்கர், அசாம், வங்க மொழிப் படங்களில் மிகவும் பிரபலமான நடிகரான இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

# ரமேஷ் படாங்கே, மராட்டிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர். இது மட்டும் இவருக்கு இப்பதவியை பெற்றுத்தந்துவிடவில்லை. இவர் தன்னை மோடியின் ஆதரவாளர் என பிரகடனப்படுத்திக் கொண்டதற்கான பரிசே இது என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

# இவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இருக்கிறார் தணிக்கை வாரியத்தின் புதிய தலைவர் பஹ்லாஜ் நிஹாலனி எனவும் பொதுவெளியில் விமர்சனங்கள் உலா வருகின்றன. அதற்குக் காரணம் இவர், மோடியை பாராட்டி ஒரு குறும்படத்தை எடுத்து அதை பிரபலப்படுத்தியவர் என்பதே. இதை உறுதிசெய்வதாகவே அமைந்திருக்கிறது, "மோடி இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் ஒரு ஹீரோ" என நிஹாலனி பாராட்டிப் பேசியிருப்பது.

ஆனால், "நான் பாஜக கொள்கைகளை உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் என் அரசியல் நம்பிக்கை என் தொழிலில் தலையிடாது" என்றும் நிஹாலனி கூறியிருக்கிறாரே என பதில் வாதத்தை முன் வைக்கின்றனர் சிலர்.

இப்படி புதிய தணிக்கை வாரியம் செயல்படுவதற்கு முன்னரே வாத, விவாதங்களுக்குள் சிக்கியுள்ள நிலையில், மத்திய - தகவல் ஒலிபரப்பு அமைச்சரிடம் கருத்து கோரப்பட்டது.

அதற்கு, "வாரியத்தில் இடம்பெற்றிருக்கும் ஒன்றிரெண்டு பேருக்கு கட்சியுடன் நேரடி தொடர்பு இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பல்துறை நிபுணர்களும் வாரியத்தில் இடம் பெற வேண்டுமல்லவா? இவ்விவகாரத்தில் மேலும் கருத்து தெரிவிக்கும் முன்னர் வாரிய உறுப்பினர்கள் விவரம் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது" என்றார் அவர்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தில் ஒரு தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் தலைவர் உட்பட 6 பேர் இருப்பது பாஜக திணிப்பு என விமர்சிக்கப்படுகிறது.

இந்த விமர்சனங்களையொட்டி பார்க்கும்போது, இந்த மாற்றியமைக்கப்பட்ட திரைப்படத் தணிக்கை வாரியம், இந்திய திரைப்படத் தணிக்கையில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x