Last Updated : 24 Sep, 2014 12:36 PM

 

Published : 24 Sep 2014 12:36 PM
Last Updated : 24 Sep 2014 12:36 PM

விவாதக்களம்: அறமற்ற அறிவியல் விவசாயத்துக்கு எதிரானதே!

புவி வெப்பமயமாதலுக்குக் காரணம் பாரம்பரிய விவசாயமா? நவீன விவசாயமா ?

மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சிகள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவன பிரம்மாக்களின் பணப்பசியை நிச்சயம் ஆற்றும்!

விவசாயமே மனித இனத்தின் முதல் அறிவியல் தொழில்நுட்பம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொன்ன அந்தத் தொழில்நுட்பம், மெய்யறிவுடன் அறிவியலை அணுகியதுதான் அதன் தனித்துவம். அந்த அறிவியல், ‘அணிநிழற்காடுகளால் மணிநீர் அவசியம்’ என்றது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கச் சொன்னது. ‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்’ என்று விவசாய விதி கண்டது. இந்தப் பண்டைய அறிவியல் புரிதலின் நீட்சியாக வரும் தொழில்நுட்பத்தை எந்த விவசாயியும் சூழலியலாளரும் எதிர்ப்பதில்லை. பஞ்சகவ்யமும் ஒற்றை நாற்றுப் பயிரிடலும் அசோஸ்பைரில்லமும் இப்படியான அறம் சார்ந்த அறிவியலில் பிறந்த தொழில்நுட்பங்கள்தான்.

இதையெல்லாம் நுட்பமாய்ப் பார்க்க மறுக்கும் வணிகம்சார் அறிவியலின் தொழில்நுட்பத்தை ஆபத் தானவை எனப் பல அறிஞர்களும் நாடுகளும் எச்சரித்த பின்பும், தவறான கருத்தாக்கத்தை முன் வைக்கிறார் >‘விவசாயத்துக்கு எதிரானதா அறிவியல்?’ கட்டுரையாசிரியர் பி.ஏ. கிருஷ்ணன். ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றாலும், புவிவெப்பமாதலின் முழுமுதற் காரணம் விவசாயம் என்பதை மறந்துவிடக் கூடாது’ என்ற அபாண்டமான பழியை விவசாயத்தின் மீது சாமர்த்தியமாகச் சுமத்தியிருக்கிறார். அது எப்போதிலிருந்து? எந்த விவசாயத்தில்? ‘உணவென்பது நிலமொடு நீரே’ என்று சொன்னவர்களிடமிருந்த விவசாயத்திலா? ‘எல்லோருக்கும் பசியாற்றும் நவீன விவசாயம்’ என்று சொல்லிப் படைக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகங்களுக்காக மண்ணில் கோடிக் கணக்கில் கொட்டப்படும் உரமும், வீரிய உற்பத்தியில் வலுவிழந்த பயிர்களுக்குத் தேவைப்பட்ட பூச்சிக்கொல்லியும்தான் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தி புவிவெப்பமாதலுக்கு அழைத்துச்செல்கிறது என்பதை, காய்தல் உவத்தல் இல்லாமல் அறம் கொண்டு பணியாற்றும் அறிஞர் அனைவரும் அறிவார்கள். பிரச்சினை அனுபவ விவசாயத்திலா அல்லது வணிகப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் அறமற்ற அறிவியலிலா?

மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் எதற்கு?

‘ஏராளமான நீரிழிவு நோயாளிகளை இன்றளவில் காப்பாற்றும் இன்ஸுலினை ஏற்றுக்கொள்பவர்கள், ஏன் மரபணு மாற்றிய உணவுக்கு மட்டும் புரட்சி வெடிக்கும் எனக் கொதிக்கிறார்கள்?’ என்ற ரீதியில் நியூயார்க்கர் இதழ் விமர்சித்திருப்பதாக எழுதியிருக்கிறார். ‘உணவே மருந்து’ என்று வாழ்ந்துவந்த, இன்னும் வாழ விரும்பும் கூட்டம் நாம். மரபணு மாற்றப் பயிர்கள், நம் பூவுலகு இத்தனை கோடி ஆண்டுகள் கண்டிராத ஒரு புது உயிரினம். இரு மரபணுக்கள் வெட்டி ஒட்டப்பட்டால் எத்தகைய விளைவு தோன்றும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது என்பதுதான் உலகின் மூத்த மரபணு விஞ்ஞானி பேரா. மைக்கேல் ஆண்டனி, இந்தியாவில் இந்த மரபணுத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் சொல்லிக்கொடுத்த வல்லுநர் பேரா. புஷ்ப பார்கவா உள்ளிட்ட பல உலகறிந்த வல்லுநர்களின் கூற்று. இன்ஸுலினின் அவசியம் உலகறிந்தது. நூற்றுக் கணக்கான கத்திரி வகைகள் ஏற்கெனவே இருக்க, மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயின் அவசியம் எதற்கு?

வீணாகும் உணவு

கதிரறுப்பில் ஆரம்பித்து, உங்கள் தட்டுக்கு வருவதற்குள் ஆண்டு ஒன்றுக்கு 130 கோடி டன் உணவை நாம் வீணாக்குகிறோம். கிருஷ்ணன் தரவாகக் காட்டிய ‘கால்நடைக்கெல்லாம் தானியம் போடாதே; அனிமல் ஃபீட் போட்டு வளர்த்துக் கொள்ளலாம்’ என்று அக்கறையாய்(?) சொன்ன ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ அலைவரிசையைப் பின்னின்று நடத்தும் பெரிய அண்ணன்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான் உணவை வீணாக்குவதில் முதலிடம். நபர் ஒருவர், ஆண்டுக்கு 95-115 கிலோ உணவை அங்கு தோராயமாக வீணாக்குகிறார். நம்மைப் போன்ற வளரும் நாடுகளும், சகாரா பாலைவனத்து ஏழை ஆப்பிரிக்க நாடுகளும் சேர்ந்தே நபர் ஒருவருக்கு 6-11 கிலோ உணவைத்தான் வீணாக்குகிறோம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் உற்பத்தி செய்யும் மொத்த அளவை (23.4 கோடி டன்) கிட்டத்தட்ட பெரிய அண்ணன் நாடுகள் சாப்பிடும்போது (22.2 கோடி டன்) மட்டும் இலையில் (பஃபேயில்) வீணடிக்கிறார்கள்.

உலகுக்குச் சோறூட்டவா?

ஒரு நாளின் சராசரி தேவையான 2,400 கலோரிக்கு, இப்போது 4,600 கலோரி உற்பத்தி செய்யப்படுகிறது என்று சொல்கிறது ஐ.ஏ.ஏ.எஸ்.டி.டி. 2012-ல் உலகளவில் கடும் பஞ்சத்தில் 40% இழப்பிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதுகூட 223.84 கோடி மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி இருந்தது என யு.எஸ்.டி.ஏ. கணக்கிட்டது. அது உலகின் மக்கள்தொகையின் தேவைக்கு, இரண்டு மடங்கு அதிகமான உற்பத்தி. விஷயம் இப்படி இருக்க… ஒட்டுமொத்த விதிகளைக் கபளீகரம்செய்ய முனைந்துள்ள நிறுவனங்கள், ஒட்டுமொத்த உலகுக்கும் சோறூட்டத்தான் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன.

இது மாதிரி போலித் தரவுகள் இன்றைக்கு நேற்றல்ல; “பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வங்காளப் பஞ்சம் முதலான பல பஞ்சங்கள் ஜோடிக்கப்பட்டவை” என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அமர்த்திய சென் ‘பாவர்டி அண்ட் ஃபேமின்ஸ்’(Poverty and Famines) என்னும் நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

அடிப்படையில், 1,000 கோடி மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்திக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களே தீர்வு என்ற கருத்தாக்கமே உண்மைக்குப் புறம்பானது. இங்கே எப்போதும் உற்பத்திக் குறைபாடு கிடையாது. பகிர்தலில்தான் பிரச்சினை, பாதுகாத்து வைப்பதில் பிரச்சினை. உற்பத்திக்குப் பிந்தைய செம்மையாக்கலில் பிரச்சினை. எப்போதும் ஏற்றுமதிக்கும் பணக்காரருக்கும் முழு உணவும் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்க… ஏழை களும் கூலியாட்களும்தான் பஞ்சத்தில் இறந்திருக் கின்றனர்.

எம்.எஸ். சுவாமிநாதன் என்ன சொல்கிறார்?

கட்டுரையில் ஆசிரியர் ஓரிடத்தில், ‘உலகம் முழுவதும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காகவே இயங்குகின்றன என்பதிலும் ஐயம் இல்லை’ எனச் சொல்லும் அவர், நான்கைந்து வாக்கியங்களில் அதை எதனாலோ மறந்துவிட்டு, ‘பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சோதனைச் சாலைகளில் பிறந்தவை என்பதனாலேயே அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்களாகிவிடாது’ என்று வாதிடுகிறார். அவர்களுக்கு லாபம்தான் முக்கியம் என்பதை முதலில் சொல்லிவிட்டு, அவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அதே அறிவியலை ஏற்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்! சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் விவசாயிகளைக் குழப்புகிறார்களா, கட்டுரையாசிரியரே குழப்புகிறாரா?

‘தி அட்வெர்ஸ் எஃபெக்ட்ஸ் ஆஃப் ட்ரான்ஸ்ஜெனிக் ஃபூட் அண்ட் கிராப்ஸ்’ (The Adverse Effects of Transgenic Food/Crops), ‘ஜிஎம்ஓ மித்ஸ் அண்ட் ட்ரூத்ஸ்’ (GMO Myths and Truths) ஆகிய நூல்களை வாய்ப்பிருக்கும்போது கட்டுரை ஆசிரியர் படித்துப் பார்க்கவும். அதுவும் இதன் முதல் நூலுக்கு, ஆசிரியர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேரா. எம்.எஸ் சுவாமிநாதன் முன்னுரை எழுதியிருப்பதையும் படித்தால் நன்று. “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நலக்கேடுகள் தரக் கூடியன. அவை, சூழலை, வேளாண்மையை, நாட்டின் இறையாண்மையைச் சிதைக்கக் கூடியன; எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பயிர்கள் நீடித்த சாகுபடியைத் தரக் கூடியவையல்ல” என்பதையும் அந்த இரு நூல்களிலும் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட, பன்னாட்டளவில் ஆராயப்பட்ட அறிவியல் தரவுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

இதையெல்லாம் யோசித்துதான் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான, தேசிய அளவிலான குழு (பிப்ரவரி 2010), சொப்போரி கமிட்டி (ஆகஸ்டு- 2012), நாடாளு மன்ற வேளாண் நிலைக்குழு (ஜூன்-ஜூலை- 2013) ஆகிய மூன்றும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், மரபணுப் பயிர்கள் வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளன.

நம் நாட்டுக் கதை

பன்னாட்டு நிறுவனங்களின் விதைக் கதை இப்படி என்றால், நம் நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பத்தில் நடந்த கதை இன்னும் பரிதாபத்துக்குரியது. 2009-ல் மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், மான் சான்டோவின் பி.டி. பருத்திக்குப் பதிலாக பி.என். பருத்தி (பிக்கனேரி நெர்மா பி.டி. பருத்தி) என ஒரு ரகத்தை இந்தியாவிலேயே உருவாக்கியது. சொப்போரி தலைமையிலான உயர்நிலைக் குழு அதனை ஆய்ந்ததில், அந்த இந்திய பிக்கனேரி நெர்மா பருத்தியிலும் மான்சான்டோ மரபணு இருப்பது உறுதியானது. இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த மரபணுக் கலப்பும் கூடத் தற்செயலாக நடந்த விபத்தல்ல. திட்டமிட்டே செய்யப்பட்டது என்று ஊகிக்கிறது சொப்போரி குழு.

மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்தியதாகச் சொல்லப் பட்ட பல்கலைக்கழக ஆய்வு வளாகத்திலேயே இந்த மரபணுக் கலப்பு சாத்தியமென்றால், கள ஆய்வுக்கென்று சொல்லி, நம் ஊர் நிலத்தில் இது பயிரிடும்போது நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள். மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆராய்ச்சி கள் மனிதகுலத்தின் கனிமப் பசியை ஆற்றுமா என்று இன்னும் முழுமையாக யாருக்கும் தெரியாது. ஆனால், பன்னாட்டு நிறுவனப் பிரம்மாக்களின் பணப் பசியை நிச்சயம் ஆற்றும்!

- கு. சிவராமன்,

மருத்துவர் - சுற்றுச்சூழல் அக்கறையாளர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x