Published : 29 Sep 2014 12:32 PM
Last Updated : 29 Sep 2014 12:32 PM

படிக்கும் வயதில் நடிக்கலாமா?

“நீ பார்க்க த்ரிஷா மாதிரி இருக்க, சினிமாவில் நடிக்க அத்தனை அம்சங்களும் உங்கிட்ட இருக்கு” என்று அழகிய பெண்களுக்குப் பலரிடமிருந்தும் இதுபோன்ற பாராட்டு கிடைக்கும். பள்ளிப் பருவ காலம் அதாவது தமிழ் இலக்கியப்படி மங்கை, மடந்தை பருவத்தில் இருக்கும்போதே தன் அழகுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைக் கேட்டு எந்தப் பெண்ணும் பூரிப்படைவாள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

இது புகழ்ச்சியுடன் நின்று விடாமல், சிலருக்கு நடிகையாகும் கனவும் முளைத்துவிடுவது உண்மை. பல சமயங்களில் அந்தப்பெண்ணைவிட அவளின் அம்மாவுக்குத்தான் தன் பெண்ணை வெள்ளித்திரையில் பிரம்மாண்டமாய் காண ஆசை ஊறிப்போய்விடுகிறது.

இந்த அழகிய மடந்தைகளின் போட்டோக்கள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கையில் கிடைக்கும்போது சில சமயம் திரைப்பட வாய்ப்பும் வந்துவிடுகிறது. ஒரு பெண்ணின் கதாநாயகி கனவு, அவளது தாயின் ஆசை இரண்டும் நிறைவேறிவிடுகிறது. பிறகென்ன பிரச்சினை? பின்தொடரும் பணம், பொருள், புகழ் இதைவிட என்ன வேண்டும் ஒருவருக்கு என்று நினைத்தே, பெண்ணின் வயதைப் பற்றிக்கூடக் கவலையின்றி திரைப்படத் துறைக்குள் நுழைத்துவிடுகின்றனர்.

பள்ளிப் பருவ காலத்தில் அனுபவிக்க வேண்டிய எதையுமே அனுபவிக்காமல் வயதுக்கு மீறிய வாழ்க்கையை வாழத் தொடங்குவதை அப்போது பலரும் உணருவதில்லை.

சட்டம் சொல்லும் நீதி

சமீபத்தில் வந்த சில திரைப்படங்களில் பதிமூன்று, பதினான்கு வயது பெண்கள் நாயகியாக அறிமுகமானதைக் குறிப்பிட்டு, 18 வயதுக்குக் குறைந்த அனைவரையும் சிறுவர், சிறுமியர் என்றே ‘சிறார் நீதிச் சட்டம்’ வரையறை செய்துள்ளது. எனவே திரைப்படங்களில் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் கதாநாயகி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்கக் கோரி கடந்த மாதம் பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திரைப்படத் துறையில் நடக்கும் நல்லது கெட்டதைத் தெரிந்துகொள்ளும் நிலையில் இந்தச் சிறுமிகள் இல்லை. இந்தச் சூழலில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கக் கட்டாயப்படுத்தப்படுவதும், வயதுக்கு மீறிய வேடத்தில் நடிக்க வைப்பதும் தொடர்ந்து நடக்கிறது.

மேலும் பதினைந்து, பதினாறு வயதில் சிறுமிகளை கதாநாயகி வேடத்தில் நடிக்கவைப்பது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றுகொண்டார். வழக்கு நடைபெறாமல் போனாலும் மனுதாரர் கூறியதில் ஆழ்ந்த சிந்தனை உள்ளது.

திருமணத்துக்குத் தயாராக பெண், ஆண் இருவருக்குமே மன ரீதியாக, உடல் ரீதியாகக் குறிப்பிட்ட வயது தேவைப்படும்போது ஒரு துறையில் பணிபுரியவும் அவை முக்கியம் என்று தோன்றுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையைச் சட்டப்படி தவறாகக் கருதும்போது நடிப்புத் துறை அதில் வராதிருப்பது ஏன் என்பது எப்போதும் உள்ள கேள்விதான்.

தெளிவு இல்லாத வயது

ஒரு பெண், பள்ளிக் கல்வியை விட்டு சினிமாவில் கதாநாயகியாகவோ அல்லது இதர பாத்திரத்திலோ நடிக்கும்போது, பெரும்பாலும் தன்னைவிட வயதில் இரு மடங்கு மூத்தவருடன் பணிபுரியும்போதும், உடல்ரீதியாக நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போதும், காதல் வசனங்கள் பேசும்போதும் தன் வயதுக்கேற்ற வெகுளித்தனத்தை இழந்துவிடுவதை உணர்வதில்லை. வயதுக்கு மீறிய செய்கைகளைச் செய்யவைக்கப்படுவ்தால் உடலிலும் மனநிலையிலும் ஏற்படும் தாக்கங்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

சரியான படங்களையும் சரியான நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்கத் தெரியாத வயதில் பல சமயங்களில் தவறான நபர்களிடம் சிக்கித் தோற்றுப்போனவர்களும் உண்டு. சக நண்பர்களுடன் துள்ளி விளையாடும் பருவத்தை அனுபவிக்காமல் போனதை வருத்ததுடன் பல நடிகைகள் கூறியதை பல முறை கேட்டுள்ளோம்.

13, 15 வயதில் நடிக்க வரும் பெண்ணுக்குத் தனக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய பெயர், புகழ்ச்சி, பணம் மட்டும் வாழ்வின் இறுதிவரை நிலைக்காது என்ற தத்துவம் புரியும் அளவுக்கு தெளிவு நிச்சயமாக இருக்காது. சுற்றியுள்ளவர்களின் உந்துதல் அவளை அந்த மாய உலகத்துக்குள் தள்ளிவிடுகிறது.

வயதுக்கு மீறிய முதிர்ச்சி

இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகும் பெண்களின் கதாநாயகி அந்தஸ்தும் சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடுகிறது. 13 அல்லது 15 வயதிலிருந்து நடிக்கும் பெண் 23, 25 வயதாகும்போதே மக்களுக்கும் சரி, இயக்குநர்களுக்கும் சரி அலுப்பூட்டத் தொடங்கி விடுகிறார். திரையில் அவர்கள் அக்கா, அம்மா பாத்திரங்களுக்கு ஒதுக்கப்படுகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் அப்பெண்கள் இளநங்கைகள்தான் என்பதைப் பலராலும் ஏற்க முடிவதில்லை. ரசிகர்கள் மட்டுமின்றி, குறுகிய காலத்தில் வயதுக்கு மீறிய அனுபவங்கள் ஏற்படுவதால், நடிகைகளுக்கே இந்த உணர்வு மெல்ல வரத் தொடங்கிவிடுவதால் கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்குகின்றனர். சிறு வயதில் தான் நடித்த ஹீரோக்களுக்கு 30 வயதில் அம்மாவாக நடிப்பதை வழக்கமாகவே ஆக்கிவிட்டனர் நம் சினிமா உலகத்தினர்.

ஒரு நடிகை, நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும்போது அவர் திருமணம் செய்துகொண்டால் அதுவே அவர் நாயகியாக நடித்த கடைசிப் படமாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் இதுதான் நிலை.

பள்ளிப்படிப்பை விடுத்து நடிக்க வருவதால் மன, உடல் ரீதியான பாதிப்பைத் தவிர இந்தப் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் சினிமாவைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இளம் வயதில் நடிக்க வரும் எல்லா நடிகையும் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவதில்லை. சோபிக்க முடியாமல் போனவர்களின் நிலை பெரிதும் மோசம். நடிகையாக வலம் வந்து, ஆடம்பர வாழ்க்கையில் இருந்துவிட்டு சினிமா வாய்ப்பு குறையும்போது கல்வித் தகுதியும் அரைகுறையாய் உள்ள நிலையில் பாலியல் கொடுமை, தற்கொலை, தவறான நபருடன் தோல்வியில் முடியும் திருமண வாழ்க்கை என்று தன் கையை மீறிப்போகும் சூழ்நிலைகளில் சிக்கி தவிப்பவர்களே அதிகம்.

படிப்பு முக்கியம்

சமீப காலங்களில் படித்த, தெளிவான பெண்களை சினிமாவில் நாயகிகளாகப் பார்ப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. திரைப்படத் துறையில் ஏற்கெனவே அனுபவம் உள்ள மூத்த நடிகர்கள் தங்கள் வாரிசுகளைக் குறிப்பிட்ட கல்விக்குப் பின்னரே நடிக்க அனுமதிப்பது அவர்களின் இந்தத் துறை பற்றிய தெளிவைக் காட்டுகிறது. இதே தெளிவை வெள்ளித்திரைக்குப் பரிச்சயமில்லாத குடும்பங்களும் காட்டினால் நல்லது. சில காலம் நடித்துவிட்டு சரிப்பட்டுவந்தால் தொடரலாம். இல்லையேல் படித்த துறையில் பணிபுரியச் சென்றுவிடலாம் என்ற சிந்தனையை இன்றைய படித்த நடிகைகளிடம் காண முடிகிறது.

முடிவெடுக்கத் தெரியாத வயதில் அம்மா, அப்பா, உற்றார் பேச்சைக் கேட்டு, பள்ளிப்படிப்பை விட்டு ஆசையில் நடிக்க வந்துவிட்டு பின் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வரும்போதுதான் பெற்றோர் மீதே வழக்கு, தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு போன்றவை நடக்கின்றன.

வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாத வயதில், நடிப்புத் துறை மட்டுமல்ல டி.வி.யில் வரும் ரியாலிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடல், பாடல் என்று வரும் வாய்ப்புக்காகக் கல்வியை உதறித் தள்ளுவது புத்திசாலித்தனமல்ல. திரும்ப முடியாத பாதையில் மாட்டித் தவிப்பதைவிட, 18 வயதுக்கு மேல், ஒரு பெண் அடிப்படைக் கல்வித் தகுதியோடு தன் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்து வகுத்துக்கொள்வது சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x