

சென்னை: பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த இளைஞரை மயிலாப்பூரில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 91 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, மாநகரம் முழுவதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னை முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மயிலாப்பூர் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று முன் தினம் காலை மயிலாப்பூர் கச்சேரி சாலை, கல்விவாரு வீதி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த இலகு ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி. கண்டிகையைச் சேர்ந்த சிவா (32) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 91 கிலோ எடையுள்ள குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸாரின் விசாரணையில், சிவா பெங்களூருவில் இருந்து குட்கா புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இவர் ஏற்கெனவே குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 2 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சிவா, விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.