

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி உள்ளது. இந்த கல்லூரியின் வங்கி கணக்கு புதுச்சேரி தனியார் வங்கியில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் கல்லுாரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தீபாவளி என்பதால் ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.8.85 கோடி அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவக் கல்லுாரி வங்கி கணக்குக்கு கடந்த 3-ம் தேதி இரவு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொகையுடன் சேர்த்து ரூ.8.85 கோடி வங்கி கணக்கில் பணம் இருந்தது. ஆனால் இந்த மொத்த பணமும் அன்று இரவு திடீரென மாயமானது.
இதையடுத்து கல்லுாரி டீன் கென்னடிபாபு கோரிமேடு சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். அதையடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், வங்கி தரப்பு, சைபர் க்ரைம் தரப்பு ஆகியோரை அழைத்து பேசினார்.
பணத்துக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக ஊதிய பணத்தை கல்லுாரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டது.
இந்நிலையில், இத்தொகை மாயமானது தொடர்பாக சைபர் க்ரைம் பிரிவு ஆய்வாளர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோசடி செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதியான ரூ.38 லட்சம் ஒரு வங்கி கணக்குக்கும் மற்றும் ரூ.8 லட்சம் மற்றொரு வங்கி கணக்குக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த வங்கி கணக்கு யாருடையது என்று அடையாளம் காண பல்வேறு இணைய வழி மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இதில் அவர்கள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சைபர் க்ரைம் பிரிவினர் சீனியர் எஸ்பி ராகவ், எஸ்பி அனுராக் சோப்ரா உத்தரவின்பேரில் கோயம்புத்தூர், திருப்பூர் விரைந்தனர். இதில் கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹாஜாநஜூபுதீன் (55) மற்றும் திருப்பூர் கொட்டம்பாளையம் பசிரியா (39) என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்து அதன் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் அட்டைகளை மற்ற நபர்களிடம் ஒப்படைத்ததோடு, மோசடிப் பணத்தைப் பெற்றுத் தொடர்புடைய நபர்களிடம் ஒப்படைத்து கமிஷன் தொகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றிய போலீஸார் அவற்றிலிருந்த முக்கியமான டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்தனர்.
பின்னர் இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் இன்று அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.