

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
குறிப்பாக, முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 7 பேர் மீதும், மதுபான உற்பத்தி ஆலை, சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற டாஸ்மாக் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மறுநாளான கடந்த 29-ம் தேதி தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர். இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களான கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கேட்டபோது, ‘வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.