

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து அபகரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோயில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட மதுரையிலுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை இடத்தை போலியாக பட்டா மாற்றம் செய்து விற்று மோசடி செய்யப்பட்டது.
இது குறித்து மீனாட்சி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கொடுத்த புகாரில் முன்னாள் தாசில்தார், சார்பதிவாளர்கள், புதுகோட்டை ராஜ்குமார் அவரது சகோதரர்கள் உட்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ராஜ்குமார், முன்னாள் தாசில்தார்,தற்போதைய துணை ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திண்டுக்கல் சிறுமலை பகுதியை சேர்ந்த காளிக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.