“மீனவர்கள் விவகாரத்தில் 3 மாத ஆட்சியில் விஜய் அரசு செய்தது என்ன?” - டிடிவி தினகரன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதைத் தாண்டி, நிரந்தரத் தீர்வு காண முதல்வர் விஜய் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய விஜய், முதல்வராகப் பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசுக்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையைத் தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்?

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய விஜய் , தான் முதல்வராகப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா?

எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பழநி நில மோசடியில் கைதாகி மதுரை சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in