

கரூர் வெங்கமேடு புதூர் பகுதியில் சிறுமியின் உடலை காட்ட மோகன்ராஜை நேற்று அழைத்துச் சென்ற போலீஸார்.
கரூர்: கரூரில் கடந்த மாதம் காணாமல் போன 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கரூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த மாதம் சிறுமி திடீரென காணாமல் போனார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் சிறுமியின் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் சந்தேகத்தின்பேரில் நெரூர் பகுதியைச் சேர்ந்த நெய் வியாபாரி மோகன்ராஜ்(32) என்பவரை நேற்று பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், திருமணமான மோகன்ராஜ், காணாமல் போன சிறுமியின் சகோதரியுடன் கூடா நட்பில் இருந்ததாகவும், ஆக.18-ம் தேதி அவரது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுமி பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதை சிறுமி வெளியில் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் மோகன்ராஜ் இரும்புக் கம்பியால் சிறுமியை தாக்கியதும், இதில் சிறுமி உயிரிழந்ததும், அவரது உடலை மோகன்ராஜும் சிறுமியின் சகோதரியும் சேர்ந்து வெங்கமேடு பாலம் அருகே உள்ள புதூர் சாலை காட்டுப் பகுதியில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மோகன்ராஜை போலீஸார் கைது செய்தனர். கரூர் டிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து மோகன்ராஜ் தெரிவித்த இடத்தில் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். நடமாடும் தடயவியல் வாகனத்தில் வந்த தடயவியல் நிபுணர்களும் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் உதவியுடன் 4 மணிநேரம் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.