

கைதான கலாவதியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார். (அடுத்த படம்) ஜெய் பாலாஜி. | படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: மதுரையில் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். மதுரை தபால்தந்தி நகர் அருகில் உள்ள கலைநகரில் வசிப்பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தது முதல் அவரிடம் உதவியாளராக (பிஏ) இருந்தார்.
மேலும், மருதம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெய் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவரை பணியில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலக்கினார்.
இந்நிலையில், ஜெய் பாலாஜி, அவரது மனைவி கலாவதி (42) ஆகியோரை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் வினோதினி தலைமையிலான போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஜெய் பாலாஜியும், கலாவதியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். கலாவதி பட்டயக் கணக்காளராக உள்ளார். நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றதும், செல்வாக்கு மிக்க நபராக ஜெய் பாலாஜி வலம் வந்தார். அமைச்சரின் பெயரைக் கூறி, மாநகராட்சி உட்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை அமைச்சருக்குத் தெரியாமலே செய்து பணம் சம்பாதித்துள்ளார்.
எச்சரித்து வெளியேற்றினார்... மாநகராட்சியில் ஒப்பந்தங்களை இறுதி செய்வது, வீட்டுமனை வரைபடங்களுக்கு அனுமதி பெற்றுத் தருவது என பல்வேறு வேலைகளைச் செய்து, பெருமளவில் பணம் சம்பாதித்தார். அந்தப் பணத்தை தனது பெயரிலும், மனைவி மற்றும் பினாமி பெயர்களில் முதலீடு செய்துள்ளார். ஜெய் பாலாஜியின் சட்டவிரோத நடவடிக்கைகள் தெரிய வந்ததால் அமைச்சர் அவரை எச்சரித்து, பணியில் இருந்து விடுவித்தார்.
மதுரையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் பல்வேறு வேலைகளைச் செய்து தருவதாகக் கூறி பொன்மேனி பகுதியில் ஒரு வீட்டு மனை ரூ.3.50 கோடிக்குப் பேசி, இரு மனைகளை வாங்கி, பத்திரப் பதிவுக்கு மட்டும் ரூ.77 லட்சம் செலவு செய்துள்ளார்.
மேலும், மாநகராட்சியில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளார். வீட்டுமனைக்குரிய தொகையையும், வேலைகளை முடித்துத்தர வாங்கிய பணத்தையும் தராமல் இருந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரை ஜெய் பாலாஜி மிரட்டியுள்ளார்.
மருதம் ரியல் எஸ்டேட் பெயரில், தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை வழங்குவதாக கணவன், மனைவி இருவரும் பொதுமக்களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்றியுள்ளனர். அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டும், ரியல் எஸ்டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவன், மனைவி மற்றும் பினாமிகள் பெயர்களில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் ஆவணங்களைச் சேகரிக்கிறோம். இந்த சொத்துகளைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2019-ம் ஆண்டுக்கு முன்னதாக ஜெய் பாலாஜி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. கணவரின் முறைகேடுகளுக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.