

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வீடு, வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேச பாண்டி (49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). மகன் கவுதம்(21). கணேச பாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.
சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு வந்த கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீஸார் கான்சாபுரம் கீழ தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதன்கிழமை காலை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, வீடு, வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், “கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடிச் சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறியதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிச் சென்றுள்ளார்.
இந்த முன் விரோதத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராகேஷ், தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.