Published : 23 Apr 2023 09:15 AM
Last Updated : 23 Apr 2023 09:15 AM
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார், சம்பவம் நடந்தபோது முதல்வராக இருந்த பழனிசாமியிடம் பாதுகாவலராக இருந்த டிஎஸ்பியும், விபத்தில் உயிரிழந்த கனகராஜூம் செல்போனில் பேசியதை உறுதி செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரலில் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தின்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் விசாரித்த நீலகிரி மாவட்ட போலீஸார், சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்.பி. முருகவேல், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். முன்னரே கைதானவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் என ஏராளமானோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு முதல்வராக இருந்த பழனிசாமியிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய காவல் உதவி ஆணையர் கனகராஜிடம் கடந்த வியாழக்கிழமை கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது ஆவடி ஆயுதப்படையில் உதவி ஆணையராக கனகராஜ் பணியாற்றுகிறார்.
கோடநாடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கனகராஜிடம், உதவி ஆணையர் கனகராஜ் பலமுறை செல்போன் மூலம் பேசியதை சிபிசிஐடி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘2014 முதல் உதவி ஆணையர் கனகராஜூக்கும், உயிரிழந்த கனகராஜூக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது. நாளடைவில் இருவரும் செல்போனில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை, உதவி ஆணையர் கனகராஜூம், உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜூம் செல்போன் மூலம் 100-க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளனர். ஆனால், சம்பவத்துக்கு பிறகு இருவரும் செல்போன் வழியாக பேசவில்லை. இவர்கள் செல்போன் மூலம் என்ன தகவல்களை பரிமாறிக் கொண்டனர் என்பதை ஆய்வகத்தின் உதவியுடன் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உதவி ஆணையர் கனகராஜிடம் விசாரித்தபோது, தெரிந்த நபர் என்பதால் நலம் விசாரிக்க தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அது உண்மையா என்பது ஆய்வக முடிவுக்கு பின்னரே தெரியவரும்.
அதேபோன்று, கொள்ளை சம்பவத்தின்போது, நடந்த செல்போன் உரையாடல்களை கண்டறிய, திருச்சியில் உள்ள தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து சிடிஆர் பதிவுக்கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, என்ன பேசினர் என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஆய்வு தற்போது தொடங்கியுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT