Published : 13 Mar 2023 07:04 AM
Last Updated : 13 Mar 2023 07:04 AM

மெரினா கடற்கரையில் அதிவேகமாக சென்ற 8 கார்களுக்கு அபராதம்

சென்னை: மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அதிவேகமாக அணிவகுத்து சென்ற 8 சொகுசு கார்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை 8 சொகுசு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாகவும், அதிக ஒலியை எழுப்பியவாறும் செல்வதாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேப்பியர் பாலம் அருகே போக்குவரத்து போலீஸார் அனைத்து சொகுசு கார்களையும் மடக்கி நிறுத்தினர். பிடிபட்ட ஒவ்வொரு காரின் மதிப்பும் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிவரை இருக்கும். சில வாகனங்களில் முறையற்ற நம்பர் பிளேட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அதிவேகத்தில் காரை ஓட்டியது, உரிய விதிப்படி நம்பர் பிளேட் பொருத்தாதது, அதிக ஒலி எழுப்புதல் உட்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 கார்களுக்கு தலா ரூ.2,500,3 கார்களுக்கு 2 ஆயிரம், ஒருகாருக்கு 1,500 என மொத்தம் ரூ.17,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு வாகனங்கள் முன் நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். வாகன பதிவெண் சரி செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் அனைத்தும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மது அருந்தி இருந்தார்களா எனவும் சோதிக்கப்பட்டது.

தனியார் விளம்பர நிறுவனம் சார்பில், படப்பிடிப்புக்காக இந்தசொகுசு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெரினாவில் தொடர்ந்து அணிவகுத்துள்ளன. இதற்காக எந்த முன் அனுமதியும் போலீஸாரிடம் பெறவில்லையாம். இதன் தொடர்ச்சியாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x