Published : 02 Mar 2023 04:05 AM
Last Updated : 02 Mar 2023 04:05 AM
மதுரை: தமிழகத்தில் ரூ.38.35 கோடியில் 1,567 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசு உரிய முடிவெடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேலமாசி வீதியில் நாகலிங்கம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் துணிக்கடை நடத்தி வருகிறோம். இந்தக் கடையை காலி செய்யும் விவகாரத்தில் திடீர்நகர் போலீஸார் எங்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும், திடீர்நகர் காவல் நிலைய 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திடீர்நகர் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணையின் போது, காவல் நிலைய சிசிடிவி கேமராவில் 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான பதிவுகள் இல்லை. 15 நாள் பதிவுகளை மட்டுமே சேமிக்க முடியும். முந்தைய பதிவுகள் தானாகவே அழிந்துவிடும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உள்துறை கூடுதல் செயலாளர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கே.முரளிசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதி டுகையில், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது மற்றும் சேமிப்புத் திறனை அதிகப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவுகள் அமல்படுத்தப் படவில்லை. இது பொதுமக்கள் நலன் சார்ந்தது. எனவே, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், அவற்றின் சேமிப்புத் திறனை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில்,
தமிழகத்தில் 1,567 காவல் நிலையங்களில் ரூ.38.35 கோடியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், அதன் சேமிப்புத் திறனை 1 முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை அதிகப்படுத்தவும் தமிழக டிஜிபியிடம் இருந்து திட்ட வரைவு பெறப்பட்டுள்ளது. இதில் 11 காவல் நிலையங்களில் காவல் நிலைய நிதியை பயன்படுத்தி ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
820 காவல் நிலையங்களில் என்விஆர் வசதியுடன் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்படும். 251 காவல் நிலையங்களில் புதிதாகவும், 496 காவல் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள பழைய சிசிடிவி கேமராக்களுக்கு பதிலாக புதிய கேமராக்களும் பொருத்தப்படும். டிஜிபியின் திட்ட வரைவு அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.
அதன் மீது அடுத்த 2 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT