

விழுப்புரம்: அன்பு ஜோதி இல்லம் ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கெடார் போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15 சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம மேலாளர் பிஜூ மோகன் மற்றும் ஆஸ்ரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் 23-ம் தேதி இரவு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனுவை இன்று விசாரணை செய்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பிஜூ மோகன், பூபாளன், முத்துமாரி, கோபிநாத், ஐய்யப்பன், சதீஷ் ஆகிய 8 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், 28 ம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 8 பேரையும் ரகசிய இடத்தில் தங்கவைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு விரைந்த போலீஸார்: இதனிடையே, சிபிசிஐடி போலீஸார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பி பகுதியில் உள்ள ஜூபின் பேபியின் நண்பரான ஆட்டோ ராஜாவுக்குச் சொந்தமான ஆசிரமத்துக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டனர்.
குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து, பெங்களூரு ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரில், 11 பேர் அங்கிருந்து எப்படி தப்பினர்? தற்போது எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதுடன், சில ஆவணங்களைக் கைப்பற்றி, அதனடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து இதுவரை 20 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்டாலும், 6 பேர் காணாமல் போனதாக கெடார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா(70), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த லட்சுமிஅம்மாள் (85), அவரது மகன் முத்து விநாயகம் (48) ஆகியோரது படங்களை வெளியிட்டு, போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக சிபிசிஐடி காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.